2015-10-26 16:11:00

ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் மறையுரை


அக்.26,2015. கடவுளின் காக்கும் கருணையில் மக்களை இணைக்கும் பணிக்கென இயேசுவின் சீடர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலை மறையுரையாற்றினார்.

அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானில் நிறைவுக்கு வந்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிகழ்த்தியத் திருப்பலியில், கருணையின் பணியை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு பார்வை அளித்த இயேசுவின் புதுமையைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, துயரங்களும், போராட்டங்களும் இறைவனின் கருணையை வெளிப்படுத்தும் தருணங்கள் என்று கூறினார்.

உலகின் எதார்த்தங்களைக் கண்டும் காணாமல் செல்வது, மற்றும், வரையறுக்கப்பட்ட வழிகளை மட்டுமே பின்பற்றுவது போன்ற சோதனைகளுக்கு, இயேசுவின் சீடர்கள் இடம் தரக்கூடாது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

பார்வையற்ற ஒருவருக்கு முன் நின்று, "உமக்கு நான் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்?" என்று இயேசு கேட்பது, அர்த்தமற்ற கேள்வியாகத் தெரியலாம் எனினும், நமது தேவைகளை நாம் வெளிப்படையாகக் கேட்பதை இயேசு விரும்புகிறார் என்பதை நாம் இந்நிகழ்ச்சியில் உணர்கிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

'துணிவுடன் எழுந்துவாரும்' என்று இயேசுவின் சீடர்கள் பர்த்திமேயுவிடம் சொல்வது, இயேசுவின் ஊக்கமூட்டும் எண்ணங்களை எதிரொலிக்கும் வார்த்தைகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பார்வையற்றவர் எழுப்பும் குரலைக் கேளாமல் நடந்துசெல்லும் சீடர்களைப் போல, இயேசுவைப் பின்தொடரும் நாமும் மக்களின் துன்பக் குரலைக் கேட்காமல் கடந்து  செல்லும் ஆபத்து உள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.