2015-10-24 16:18:00

விண்வெளியில் ஆயுதப் போட்டி தடைசெய்யப்பட வேண்டும்


அக்.24,2015. விண்வெளி, உலகளாவிய பொது நலனுக்கு உரியதாக நோக்கப்பட்டு, விண்வெளி சுற்றுச்சூழல், மனித சமுதாயத்தின் பொதுவான பாரம்பரியச் சொத்தாக, பாதுகாக்கப்படுமாறு ஐ.நா.வில் கேட்டுக்கொண்டார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

ஐ.நா.வின் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, ஐ.நா.வில் இடம்பெற்ற எழுபதாவது பொது அமர்வில், விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடைசெய்தல் குறித்த விவாதத்தில்   உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

1957ம் ஆண்டில் முதல் செயற்கைகோள் விண்வெளியில் செலுத்தப்படுவதற்கு முன்னரே, விண்வெளி இராணுவமயமாக்கப்படுவதன் ஆபத்துக்களை அறிந்து, விண்வெளியை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது பற்றிய முயற்சிகளை ஐ.நா. மேற்கொண்டது என்றும் கூறினார் பேராயர் அவ்சா.

விண்வெளியில் ஆயுத அமைப்புகள் செயல்படுவதும், ஆயுதங்கள் பரிசோதனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் அவ்சா அவர்கள், இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டுமென்று திருப்பீடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

விண்வெளி, முழு மனித சமுதாயத்தின் மகிழ்வுக்காக வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்றும், அங்கு நடத்தப்படும் அறிவியல் மற்றும் அமைதிக்கான ஆய்வுகள் அனைவருக்கும் பயன்படுவதாய் அமைய வேண்டுமென்றும் வலியுறுத்தினார் பேராயர் அவ்சா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.