2015-10-23 16:47:00

மியான்மார் பொதுத்தேர்தல் திருஅவைக்கு மிகவும் முக்கியம்


அக்.23,2015. மியான்மாரில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் கத்தோலிக்கத் திருஅவைக்கு, அந்நாட்டில் வருகிற நவம்பரில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் இடம்பெற்றுவரும் குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், மியான்மாரில் வருகிற நவம்பர் 8ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பற்றி வத்திக்கான் வானொலியில் பேசியபோது இவ்வாறு கூறினார்.

இப்பொதுத் தேர்தல் உட்பட அந்நாட்டின் வளர்ச்சி குறித்து ஆயர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் எனவும், சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் ஒப்புரவு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்குமாறு ஏற்கனவே தான் வேண்டுகோள் விடுத்திருப்பதையும் குறிப்பிட்டார் கர்தினால் போ.

மியான்மாரில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திரமான வகையில் முதன்முறையாக இப்பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மார் 1824ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டுவரை பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1962ம் ஆண்டுவரை சுதந்திரத்தை அனுபவித்த அந்நாட்டில் ஏற்பட்ட இராணுவ ஆட்சி கவிழ்ப்பால், 2011ம் ஆண்டுவரை கடுமையான இராணுவ ஆட்சியின் கீழ் அந்நாடு இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.