2015-10-23 16:26:00

நற்செய்தியில் வேரூன்றி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டும்


அக்.23,2015. காலங்கள் மாறுகின்றன, கிறிஸ்தவர்களாகிய நாம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்க வேண்டும், ஆயினும் இம்மாற்றம் சுதந்திரத்தோடு, நற்செய்தியின்  உண்மைக்குள் வேரூன்றியதாக இருக்க வேண்டும் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் காலத்தின் அடையாளங்களை நோக்க வேண்டும் என்றும் கூறிய  திருத்தந்தை, வசதி வாழ்வில் மூழ்கி விடாமல், செபத்தால் தூண்டப்பட அனுமதிக்க  வேண்டும் என்றும் கூறினார்.

வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், பவுலடிகளார் உரோமையருக்கு எழுதிய இந்நாளின் முதல் வாசகத்திலிருந்து(உரோ.7:18-25) சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, திருஅவை, காலத்தின் அறிகுறிகளைத் தேர்ந்து தெளிதலில் தன்னை உட்படுத்தும்போது, அதில் கிறிஸ்து என்ன சொல்ல விரும்புகிறார் என்று நோக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பாவத்திலிருந்து நம்மை மீட்ட சுதந்திரம் பற்றி பவுலடிகளார் பேசும்போது, காலத்தின் அறிகுறிகள் பற்றி கிறிஸ்துவே பேசுகிறார் என்பதையும் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை. காலங்கள் மாறுகின்றன, இந்த மாற்றங்களை கிறிஸ்தவ ஞானம் ஏற்கின்றது, காலங்கள் மாறுவதையும், காலத்தின் மாற்றங்களையும் ஏற்கும்போது, இவை உணர்த்தும் அர்த்தத்தை, அச்சமின்றி சுதந்திரத்துடன் நோக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காலங்கள் மாறுகின்றன, கிறிஸ்தவர்களாகிய நாம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்க வேண்டும், அவ்வாறு மாறும்போது, இயேசு கிறிஸ்துவில் நாம் வைத்துள்ள விசுவாசத்திலும், நற்செய்தியின் உண்மையிலும் நம் கண்களைப் பதிக்க வேண்டும் என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.