2015-10-23 17:00:00

தலித்மக்களின் பாதுகாப்புக்கு கத்தோலிக்க திருஅவை வலியுறுத்தல்


அக்.23,2015. புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள Sunped கிராமத்தில் இரண்டு தலித் குழந்தைகள் தீ வைத்துக் கொல்லப்பட்டிருப்பது, வெறுக்கத்தக்க குற்றம் என்று சொல்லி, நாட்டில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமாறு கேட்டுள்ளது இந்திய கத்தோலிக்க திருஅவை.

கொல்லப்பட்ட ஒரு குழந்தை 2 வயது, மற்றொரு குழந்தை 9 மாதங்கள் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழு செயலர் அருள்பணி தேவசகாய ராஜ் அவர்கள், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் இந்தியா எங்கும் இடம்பெறுகின்றன என்று கூறினார்.

இந்த வன்செயலுக்கு எதிராக, இந்திய கத்தோலிக்க திருஅவை தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது என்றும், சமுதாயத்தில் நலிந்த மற்றும் குரலற்ற மக்களுடன் கத்தோலிக்க திருஅவை என்றும் உடனிருக்கின்றது என்றும் கூறினார் அருள்பணி தேவசகாய ராஜ்.

சோன்பேட் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் என்பவரது வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேறொரு சமூகத்தினர் தீ வைத்தனர். இதில் அவரது இரண்டரை வயது மகன் வைபவும், 11 மாதப் பெண் குழந்தை திவ்யாவும் உயிரிழந்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜிதேந்தரின் மனைவி ரேகாவுக்கு தில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அரியானாவில் புறா திருடியதாகக் கைது செய்யப்பட்ட தலித் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.