2015-10-23 16:38:00

உலக ஆயர்கள் மாமன்றம்:பத்திரிகையாளர் சந்திப்பு


அக்.23,2015. குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி விளக்குவதற்கு இவ்வெள்ளி பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களுடன், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், கானடாவின் கியூபெக் பேராயர் கர்தினால் Gérald Cyprien Lacroix, பெல்ஜியத்தின் Gent ஆயர் சலேசிய சபையின் Lucas Van Looy ஆகியோரும் இருந்தனர்.

இவ்வியாழன் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய திருப்பீட அவை ஒன்றை உருவாக்கியது பற்றி அறிவித்தது, இன்னும், உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது பற்றி இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

இந்த ஆலோசனை குழு உறுப்பினர்களின் பெயர்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், இவ்வெள்ளி காலை பொது அமர்வில் 51 பேர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர், ஒவ்வொருவருக்கும் 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன என்றும் மனச்சான்றுக்கும், அறநெறி சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு குறித்து அதிகம் கவனம் செலுத்துப்பட்டது என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி 

Instrumentun laboris என்ற இந்த ஆயர்கள் மாமன்றத்தின் வரைவுத் தொகுப்பின் மூன்று பிரிவுகளுக்கும் மாமன்றத் தந்தையர் 1,355 பரிந்துரைகளை வழங்கியுள்ளனர் என்றும், இம்மாமன்றத்தின் இறுதித் தொகுப்பு இச்சனிக்கிழமை வாக்கெடுப்பு விடப்பட்டு திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.