2015-10-22 16:28:00

திருத்தந்தை : கிறிஸ்தவர்க்கு மனமாற்றம் என்பது அன்றாட வேலை


அக்.22,2015. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் புனித வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும், இம்முயற்சி தூய ஆவியாருக்கு நம் இதயக் கதவைத் திறக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வியாழன் காலையில், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய இந்நாளின் முதல் வாசகத்தை(உரோ.6:19-23) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். கிறிஸ்தவர்க்கு மனமாற்றம் என்பது அன்றாட வேலை, ஒவ்வொரு நாளும் ஆற்ற வேண்டிய இவ்வேலை, இயேசு கிறிஸ்துவை நாம் சந்திப்பதற்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவர்க்கு, மனமாற்றம் என்பது ஒரு கடமை, இதற்கு நாம் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும் என்றும் கூறினார். ஒரு விளையாட்டு வீரர், விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு பெரு முயற்சி செய்கிறார், இந்த விளையாட்டு வீரரை பவுலடிகளார் நம் முயற்சிக்கு உருவகமாகப் பேசுகிறார், விண்ணகம் என்ற மாபெரும் வெற்றி அடைவதற்கு நமது முயற்சி என்ன என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.    ஒவ்வொரு நாளும், நம் முழு இதயத்தோடும், முழு வலிமையோடும், முழு மனதோடும் நம் வாழ்வு முழுவதோடும் ஆண்டவருக்குச் சேவையாற்றுவதற்கு நாம் எடுக்கும் முயற்சி, தூய ஆவியாருக்கு கதவைத் திறந்து வைக்கின்றது, இவரே நம் வாழ்வில் நுழைந்து நம்மை மீட்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். புற்றுநோயால் தாக்கப்பட்ட ஓர் இளம் தாயை சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தேன், அவர் மகிழ்வாக, நலமாக இருப்பவர் போல் காணப்பட்டார், இந்நோயின் வேதனையை எவ்வாறு தாங்குகிறார் என்பதை விவரித்தார், இவர்போன்று, இயேசு கிறிஸ்துவைக் கொடையாகப் பெற்றுள்ள கிறிஸ்தவர்களும் தங்களுக்கு வரும் சோதனைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை. பிறரைப் பற்றி தவறாகப் பேசுவது உட்பட நமக்கு வருகின்ற சோதனைகள் குறித்து எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் புனித வாழ்வு வாழ நாம் முயற்சிக்க வேண்டும், இதற்கு அருள் வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம் என்றும் கூறினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.