2015-10-21 18:02:00

மரண தண்டனை இரத்து செய்யப்பட மதங்கள் வலியுறுத்தல்


அக்.21,2015. தென் கொரியாவில் இவ்வாண்டு முடிவதற்குள் மரண தண்டனை சட்டம் இரத்து செய்யப்படுமாறு, அந்நாட்டின் ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் சார்பில் மக்களவையைக் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார் தென் கொரிய கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

தென் கொரியாவில் மரண தண்டனை இரத்து செய்யப்படுவதற்கு உதவுமாறு, கொரிய தேசிய அவைத் தலைவரையும் சந்தித்து விண்ணப்பித்ததாகக் கூறினார், தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுத் தலைவர் ஆயர் Lazzaro You Heung-sik.

தென் கொரிய சமயத் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்களை இச்செவ்வாயன்று சந்தித்தது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள், மரண தண்டனையை இரத்து செய்வதற்கு மக்களவைத் தலைவர் உறுதியளித்தார் என்றும் கூறினார்.

கடந்த ஜூலை 6ம் தேதி இதுமாதிரியான ஒரு சந்திப்பை இச்சமயத் தலைவர்கள் நடத்தினர். ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள் தலைமையில் இத்தலைவர்கள் குழு இச்சந்திப்புகளை நடத்தியுள்ளது. 

1996ம் ஆண்டுக்குப் பின்னர் 2010ம் ஆண்டில் இரண்டாவது முறையாக, கொரிய அரசியல் அமைப்பு நீதிமன்றம், மரண தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளது.

தென் கொரிய மக்களவையின் 299 உறுப்பினர்களில் 172 பேர் மரண தண்டனையை இரத்து செய்வதற்கு ஆதரவான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.