2015-10-21 17:43:00

திருமணத்திற்கு முன்தயாரிப்பு முக்கியம்,இஸ்பெயின் கர்தினால்


அக்.21,2015. மக்கள் மகிழ்வாக வாழவும், குடும்பத்தை அமைக்கவுமே திருமணம் செய்து கொள்வதால், இத்திருமணம் நிலைத்து நிற்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் என்று, குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரிதிநிதிகள் கூறினர்.

இச்செவ்வாயன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இஸ்பெயினின் பார்சலோனா கர்தினால் Lluis Martinez Sistach, மெக்சிகோவின் மொரேலியா கர்தினால் Alberto Suarez Inda, தென்னாப்ரிக்காவின் டர்பன் கர்தினால் Wilfrid Napier ஆகிய மூவரும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினர்.

திருமணம் முறிவுபடாமல் நிலைத்து நிற்க வேண்டும் என்பதால், அதற்கு முன்தயாரிப்பு முக்கியம் என்றும், நோயால் தாக்கப்படுவதற்கு முன்னர், நோய் ஏற்படுவதற்கான காரணத்தைத் தடுப்பது அவசியம் என்றும் கூறினார் கர்தினால் Martinez Sistac.

திருமணத்தைச் செல்லாததாக ஆக்குவது குறித்த திருத்தந்தையின் அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த கர்தினால் Martinez Sistac அவர்கள், உலகின் மறைமாவட்டங்களிலுள்ள திருஅவை நீதிமன்றங்கள் எல்லாமே, மக்களைப் போதுமான அளவுக்குத் தயாரிக்கின்றன என்று சொல்ல முடியாது, இந்த வழிமுறைகள் சுதந்திரமானதாக அமைய வேண்டும் என்றும் கூறினார்.

டர்பன் கர்தினால் Wilfrid Napier அவர்களும், துறவு வாழ்வைப் போலவே, திருமணமும் ஓர் அழைப்பு என்பதால், திருமணத்திற்குத் தயாரிப்பு முக்கியம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.