2015-10-21 16:17:00

சுதந்திரம்,பிரமாணிக்கம் குடும்பத்தின் மூலைக்கற்கள்


அக்.21,2015. வத்திக்கானில் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றம் மூன்றாவது வாரமாக நடைபெற்று வருகிறது. மாமன்றத் தந்தையர் குடும்பங்களின் நலன்களைக் கண்முன்கொண்டு கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வேளையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதனன்று அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மறைக்கல்வி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம் குறித்தே தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார். அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கம். குடும்பம் பற்றிய நம் மறைக்கல்வியில் நம் குழந்தைகளை இவ்வுலகுக்குக் கொண்டு வரும்போது நாம் அவர்களுக்கு அளிக்கும்  வாக்குறுதிகள் குறித்து கடந்த வார இந்தப் பதன் பொது மறைக்கல்வி உரையில் பேசினோம். அதைத் தொடர்ந்து, இன்று, அனைத்துக் குடும்ப வாழ்வுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள கணவருக்கும், மனைவிக்கும் இடையே வழங்கப்படும் அன்பு மற்றும் பிரமாணிக்க வாக்குறுதி பற்றிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

கணவரும், மனைவியும் தங்களுக்கிடையே செய்துகொள்ளும் இந்த வாக்குறுதி, ஏதோ தனிப்பட்டவரின் சுதந்திரத்தை எதிர்ப்பதாக, இக்காலத்தில் இது கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது. ஆயினும், நமது சுதந்திரம், நம் வாழ்வு முழுவதும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தெரிவுகளுக்கும், அர்ப்பணங்களுக்கும் நாம் விசுவாசமாக இருப்பதால் உருப்பெற்று காக்கப்பட்டு வருகிறது என்பேத உண்மை. நம் வாக்குறுதியைக் கட்டிக்காப்பதற்கு நம் எடுக்கும் அன்றாட முயற்சிகளின் வழியாக இந்தப் பிரமாணிக்கம் வளர்கிறது. உண்மையில், நம் வாக்குறுதிகளுக்குப் பிரமாணிக்கமாக இருப்பது, மனிதர்கள் என்ற முறையில் நம் மாண்பின் மிக உன்னத வெளிப்பாடாகும். இத்தகைய பிரமாணிக்கத்தை நமக்குக் கற்றுத்தரும் பள்ளி, திருமணம் மற்றும் குடும்பத்தைவிட வேறு எதுவும் மேலானதாக இருக்க முடியாது. திருமணமும் குடும்பமும், இறைவனின் திட்டத்தில் இவ்வுலகுக்கு ஓர் ஆசிர்வாதமாகும். குடும்பத்திற்கு அடித்தளமாக அமையும் அன்பு, கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் இடையேயுள்ள பிணைப்பைச் சுட்டிக் காட்டுகின்றது என்று, பவுலடிகளார் சொல்கிறார்.  குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றுவரும் இந்நாள்களில், திருஅவை, குடும்பத்தின் வாக்குறுதியைத் தாங்கிப் பிடித்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்று செபிப்போம். நம் ஆண்டவர் தமது ஒவ்வொரு வாக்குறுதியையும், நிறைவேற்றுகின்ற மாறாத அன்பில் உறுதியான நம்பிக்கை வைத்து திருஅவை குடும்பத்தின் வாக்குறுதியை வலுப்படுத்தச் செபிப்போம்

இவ்வாறு இப்புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கு ஆதரவாகச் சான்று பகரும் நாகசாகி இசைக் குழு, இன்னும், மலேசியா, சீனா, இந்தோனேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தி,  தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.