2015-10-21 18:06:00

அதிகமான துப்பாக்கிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவராது


அக்.21,2015.  பிலிப்பைன்சில், பொது மக்கள் குழுக்களுக்கும், தனிப்பட்ட ஆயுதம் ஏந்திய படைகளுக்கும் ஆயுதங்களை விநியோகிப்பதற்கென மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தீர்மானித்திருப்பது கவலை தருகின்றது என்று அந்நாட்டின் மின்டனாவோ இயேசு சபை பல்கலைக்கழகத் தலைவர் அருள்பணி ஜோயெல் தபோரா அவர்கள் கூறினார்.பூர்வீக இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பகுதிகளில் துப்பாக்கிகளை விநியோகிப்பதும், ஆயுதம் ஏந்திய குழுக்களையும், படைகளையும் அமர்த்துவதும் அதிகமான மக்கள் இறப்பதற்கே வழி அமைக்கும் என்று அருள்பணி தபோரா அவர்கள் மேலும் கூறினார்.

கடந்த செப்டம்பர் முதல் தேதியன்று, ஆயுதம் ஏந்திய உப இராணுவ குழுக்களும், படைவீரர்களும், சுரியாகோ தெல் சூர் மாநிலத்தில் ஹான்யாயன் கிராமத்தில் நுழைந்து இரு பூர்வீக இனத் தலைவர்களையும், வேளாண் இயக்க செயல்திட்ட இயக்குனரையும் கொலை செய்தனர். இதில் தொடங்கிய கலவரத்தில் ஏறக்குறைய மூவாயிரம் பூர்வீக இன மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.  

இதற்கிடையே, 73 ஆசிய பூர்வீக இன நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களுக்கு இவ்விவகாரம் குறித்து கவலை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆதாரம் : CBCP/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.