2015-10-21 17:57:00

அ.சகோ.வல்சா கொலை வழக்குத் தீர்ப்புக்கு ஆயர்கள் வரவேற்பு


அக்.21,2015. இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கத்தோலிக்க அருள்சகோதரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் மறைப்பணியாளர்க்கு எதிரான தாக்குதலைத் தடுக்க உதவும் என்று சொல்லி, அத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர் இந்திய ஆயர்கள்.

2011ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அருள்சகோதரி வல்சா ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் 16 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இயேசுமரி பிறரன்பு சபை சகோதரிகள் சபை சகோதரியான வல்சா அவர்கள், தும்கா மறைமாவட்டத்தில் சந்தால் பூர்வீக இன மக்களின் உரிமைகள் காக்கப்படுவதற்காக உழைத்து வந்தவர். 

பூர்வீக மக்கள் அதிகமாக உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறைப்பணியாளர்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உதவுவதாக இத்தீர்ப்பு உள்ளது என்று தும்கா ஆயர் ஜூலியஸ் மரான்டி அவர்கள் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பைப் பாராட்டியுள்ள ராஞ்சி துணை ஆயர் Theodore Mascarenhas அவர்கள், ஏழைகளின் குரலை அடக்குவதற்கு வன்முறையில் ஈடுபடும் மக்களுக்கு இது நல்ல பாடம் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.