2015-10-20 14:21:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை – பகுதி - 3


"ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்" என்று லூக்கா நற்செய்தியின் 14ம் பிரிவு ஆரம்பமாகிறது. இவ்வரிகளில் கூறப்பட்டுள்ள, ஓய்வுநாள், பரிசேயர் தலைவர் வீடு, விருந்து என்ற பெயரில் இயேசுவுக்கு விரிக்கப்பட்ட ஒரு வலை, கூடியிருந்தோரின் கவனம் என்ற 4 அம்சங்கள் ஓர் இறுக்கமானச் சூழலை உருவாக்கின என்று சென்ற விவிலியத் தேடலில் நாம் குறிப்பிட்டோம். இத்தகைய இறுக்கமானச் சூழலில், மற்றொரு சவாலான அம்சம் இணைந்தது. "அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்" என்று லூக்கா நற்செய்தி தொடர்கிறது.

நோயுற்ற ஒருவரை, பரிசேயர் தலைவர் தன் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்; எனவே, நோயுற்றவர், விருந்து நடந்த அந்த வீட்டுக்குள் தன்னைத் தானே அழைத்துக்கொண்டார் என்று எண்ணிப்பார்ப்பதே பொருத்தம் என்று ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில், கிராமங்களில், சிற்றூர்களில் இவ்விதம் நடப்பது இயல்பு என்பதை இவ்விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றும், இத்தகைய நிகழ்வுகள் நம் கிராமங்களில் நடப்பது இயல்புதானே! ஒரு கிராமத்திற்கு முக்கியமான ஒருவர் வருகிறார் என்றால், அச்செய்தி வெகு விரைவில் கிராமம் முழுவதும் பரவிவிடும். அவர் எந்த வீட்டுக்கு வந்திருந்தாலும் சரி, அவரைக் காண்பதற்கு, அந்த வீட்டைச்சுற்றி கிராமமே கூடிவிடும். அந்த வீட்டு உரிமையாளர் அழைப்பு விடுத்தாரா, இல்லையா என்றெல்லாம் யாரும் எண்ணிப்பார்ப்பது கிடையாது. கிராமத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், முக்கியமான ஒருவரின் வருகை நேரத்தில், இப்பிரிவுகள் பெருமளவு தொலைந்து, விவரிக்கமுடியாத ஒரு சமத்துவம் அங்கு உருவாகும்.

இத்தகைய ஒரு 'சமத்துவச் சூழல்' இயேசுவைச் சுற்றி எப்போதும் நிலவி வந்தது. குறிப்பாக, இயேசுவின் குணமளிக்கும் வல்லமை இந்த சமத்துவத்தை இன்னும் அதிகமாக உறுதி செய்தது. நோயுற்றவர் என்ற ஒரே காரணத்தால், சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்ந்த பலருக்கு, இயேசுவின் குணமளிக்கும் வல்லமை, புதியதோர் உறுதியைத் தந்தது. நோயுற்றோரைத் தீண்டினாலே தீட்டு, எனவே, கூட்டங்களில் கலந்து, மற்றவர்களைத் தீட்டுப்படுத்தும் நோயாளிகளை, கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற எண்ணங்கள் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்தன. கல்லெறிந்து கொல்லப்படுவோம் என்ற அச்சம் இருந்தாலும், இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டங்களில், அழைப்பு ஏதுமின்றி, நோயுற்றோர் கலந்துகொண்டனர் என்பதை நற்செய்தியின் பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நோயுற்றோருக்கு மட்டுமல்ல, நோயுற்றோரின் உறவினர், நண்பர்கள் மத்தியிலும் இந்த நம்பிக்கை வளர்ந்தது என்பதையும் நாம் காண்கிறோம். இயேசு போதித்துக் கொண்டிருந்த ஒரு வீட்டில் கூட்டம் அதிகமிருந்ததால், முடக்குவாத நோயுற்ற ஒருவரை, கட்டிலோடு சுமந்துவந்த நண்பர்கள், வீட்டுக் கூரையைப் பிரித்து, அவரை, இயேசுவுக்கு முன் இறக்கிய நிகழ்வை, நற்செய்தியாளர்கள் மாற்கு, லூக்கா இருவரும் குறிப்பிட்டுள்ளனர் (மாற்கு 2: 1-12; லூக்கா 5: 17-26).

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர், நோயுற்றோர் ஆகியோருக்கு முதலிடம் கொடுத்து, இயேசு, துணிவுடன் ஆற்றிய பணி, நோயுற்றோரை மட்டுமல்ல, இஸ்ரயேல் சமுதாயத்தையும் குணமாக்கியது என்று Skye Jethani என்ற எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு அவர் வெளியிட்ட, 'The Divine Commodity' என்ற நூலில், இயேசு, தான் வாழ்ந்த கலாச்சாரத்தில் காணப்பட்ட பாகுபாடுகளை எவ்விதம் குணமாக்கினார் என்பதைக் கூறுகிறார். அதேநேரம், முன்னேற்றம் என்ற பெயரால், எளிய வாழ்வை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுள்ள மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி, Jethani அவர்கள், வருத்தத்துடன் வெளியிட்டுள்ள ஒரு கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. முன்னேற்றம் என்ற பெயரால், பல கருவிகள் புடைசூழ வாழும் மேற்கத்தியக் கலாச்சாரத்தில், சமுதாயம் மட்டுமல்ல, குடும்பங்களும் பல துண்டுகளாகப் பிளவுபட்டுக் கிடப்பதை அவர் இவ்விதம் கூறுகிறார்:

"மேற்கத்தியக் காலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தன்னைச் சுற்றி வேலிகள் கட்டுகின்றது. குடும்பங்களுக்குள்ளும் ஒவ்வொருவருக்கும் தனி அறைகள் குறிக்கப்பட்டு, சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அவரவர் தங்கள் அறைக்குள் தொலைகாட்சி, இணையத்தளத் தொடர்பு என்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள பிரிவுச் சுவர்கள் இன்னும் உறுதியாக்கப்பட்டுள்ளன. பிழைப்பு தேடி நாம் உருவாக்கிக் கொண்ட நகரம், புற நகரம் ஆகியப் பகுதிகளில், அவரவர் தன் தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் வகையில் பிளவுபட்டு வாழ்கிறோம்."

Family zones are demarcated by fences. And within the home, family members are zoned into private bedrooms – each with a television, Internet connection, and telephone. The suburb, like the consumer worldview from which it came, forms us to live fragmented and isolated lives of private consumption.

Skye Jethani (2009), ‘The Divine Commodity’

தொடர்புக் கருவிகள் பல நூறு மடங்கு பெருகியுள்ள இன்றையச் சூழலில், ஒவ்வொருவரும் தனித் தனித் தீவுகளை உருவாக்கி சிறைப்பட்டிருப்பது, இன்றைய முன்னேற்றங்களை வாங்க நாம் கொடுக்கும் விலை.

சமுதாயத்தில் நிலவும் பல பிளவுச் சக்திகளை, தன்னுடைய பிரசன்னத்தால் அழித்து, மக்களை ஒருங்கிணைத்த இயேசுவிடம் நாம் திரும்புவோம். பரிசேயர் தலைவர் வீட்டில், விருந்துண்ண அமர்ந்த இயேசுவுக்கு முன் நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் இருந்தார் (லூக்கா 14: 1-2) என்று லூக்கா நற்செய்தியில் காணும் கூற்றை நாம் அலசும்போது, நோயுற்றவர் எவ்வித அழைப்புமின்றி தானாகவே வந்திருக்கலாம் என்ற கோணத்தில் இதுவரைச் சிந்தித்தோம்.

ஆயினும், நோயுற்ற ஒருவரை, பரிசேயர் தலைவர் இவ்விருந்துக்கு அழைத்திருக்கக் கூடும் என்று வேறு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். "அங்கிருந்தோர் இயேசுவைக் கூர்ந்து கவனித்தனர்" என்ற வார்த்தைகள் இத்தகைய விளக்கத்தை உறுதி செய்கின்றன. பரிசேயர் தலைவர், இயேசுவை இந்த விருந்துக்கு அழைத்ததே அவரைச் சோதிப்பதற்குத்தான் என்ற கோணத்தில் நாம் சிந்தித்தால், அவர் நோயுற்ற ஒருவரையும் அழைத்து, இயேசுவின் கண்களில் படுமாறு அவரை அங்கு அமரச் செய்திருப்பார் என்பதும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விளக்கம்தான்.

இத்தகைய விளக்கத்திற்கு இந்த விரிவுரையாளர்கள் கூறும் ஒரு முக்கியமான காரணம்... அது 'ஒய்வுநாள்' என்ற பின்னணி. ஒய்வுநாளில் இயேசு நோயுற்றோரைக் குணமாக்கும் நிகழ்வுகள் நான்கு நற்செய்திகளிலும் 7 முறை சொல்லப்பட்டுள்ளன. அவற்றில், 5 நிகழ்வுகள் லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ளன. இந்த 5 நிகழ்வுகளில் 3 தொழுகைக் கூடத்தில் நிகழ்ந்தன; நான்காவது, பேதுருவின் வீட்டில் நிகழ்ந்தது, 5வது நிகழ்வு, பரிசேயர் தலைவர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்தது. இந்நிகழ்வைத்தான் இப்போது நாம் சிந்தித்து வருகிறோம்.

பரிசேயர்களும், சட்டநூல் அறிஞர்களும் இயேசு குணமளிக்கிறார் என்பதை வேண்டாவெறுப்புடன் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அவர் ஒய்வுநாளில் குணமளித்தார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஓய்வுநாள் ஒன்றில், தொழுகைக் கூடத்தில், கை சூம்பிய ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வை நாம் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் வாசிக்கிறோம். (மத். 12: 9-14; மாற். 3: 1-6; லூக். 6: 6-11) இந்நிகழ்வுக்கு விளக்கம் அளிக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள், கைசூம்பிய மனிதர் தானாகவே அந்தத் தொழுகைக் கூடத்திற்கு வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலரோ, இயேசுவைப் பரிசோதிக்கும் நோக்கத்துடன், பரிசேயர்கள், நோயுற்றவரை தொழுகைக்கூடத்திற்குக் கொணர்ந்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒய்வு நாள் என்ற முக்கியமான விதிமுறையை, தொழுகைக்கூடத்திலே, மக்கள் கூட்டத்திற்கு முன்பாகவே இயேசு மீறினார் என்ற குற்றத்தை அவர் மீது சுமத்த பரிசேயர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு முயற்சி இதுவென்று விரிவுரையாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். ஒய்வுநாள் விதிகளை மீறினார் என்பது, இயேசுவின் சிலுவை மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல. இவ்வெண்ணத்தை உறுதி செய்யும் வகையில், இந்நிகழ்வின் இறுதியில், பரிசேயர்கள், ஏனைய மதத்தலைவர்களுடன் கூடி, இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டினர் என்பதை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்துள்ளனர். (மாற். 3:6; மத். 12:14; லூக். 6:11)

பரிசேயர்களின் கண்டனங்களுக்கும், திட்டங்களுக்கும் ஏற்கனவே உள்ளாகியிருந்த இயேசு, இப்போது, பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிலேயே ஒய்வுநாள் விதிகளை மீண்டும் ஒருமுறை மீறுகிறார். இயேசுவைப் பொருத்தவரை, “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” (மாற்கு 2: 27-28) என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்ததால், நீர்க்கோவை நோயுற்றவரை ஓய்வுநாளில், அதுவும் பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டில், அவர் கண்களுக்கு முன்பாகவே குணமாக்கினார்.

தான் ஆற்றிய அந்தப் புதுமையை மேலும் பெரிதுபடுத்தாமல், தன் அடுத்த படிப்பினைகளை அவர்களுக்கு வழங்கினார் இயேசு. பெரிய விருந்து உவமைக்கு முன்னதாக, லூக்கா நற்செய்தி 14ம் பிரிவின் 7 முதல் 14 முடிய உள்ள இறைச் சொற்றொடர்களில், விருந்து அளித்தவர்களுக்கும், விருந்தில் கலந்துகொள்ள வந்திருந்தோருக்கும் இயேசு அறிவுரைகள் வழங்கியதாக ஒரு பகுதி கூறப்பட்டுள்ளது. இயேசு வழங்கிய இந்த மிக எதார்த்தமான, நடைமுறைக்கு ஏற்ற அறிவுரைகளிலிருந்து, நம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ள அடுத்த விவிலியத் தேடலில் முயல்வோம். 








All the contents on this site are copyrighted ©.