2015-10-20 15:51:00

மாமன்றத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சாதாரணமானதுதான்


அக்.20,2015.  பல்வேறு சூழல்கள் மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த இடங்களிலிருந்து  உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளிடமிருந்து பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிப்படுவது சாதாரணமானதுதான், இது மாமன்றத்தின் அழகான அடையாளமாக உள்ளது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.

மாமன்றத்தின் பிரதிநிதிகள் மத்தியில் சில கூறுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சாதாரணமானதுவே, ஆயினும், தந்தையர் அனைவரும் குடும்பங்களின் நன்மையையே விரும்புகின்றனர் என்றும் கூறினார் முதுபெரும் தந்தை Fouad Twal.

இத்திங்களன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முதுபெரும் தந்தை Fouad Twal, ஆஸ்திரேலியாவின் Brisbane பேராயர் Mark Benedict Coleridge, இத்தாலியின் பார்மா ஆயர் Enrico Solmi ஆகிய மூவரும், திருமண முறிவு பெற்றவர்கள் மற்றும் மறுமுறை திருமணம் செய்துகொண்டவர்கள், திருநற்கருணை வாங்குவதற்கு அனுமதிப்பது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தனர்

திருமண முறிவு பெற்று, பின்னர் மறுமுறை திருமணம் செய்துகொண்ட தனது பெற்றோர்க்கு, ஒரு குழந்தை திருநற்கருணையை இரண்டாகப் பிட்டு வழங்கியது உட்பட இத்தகையவர்களுக்கு, திருநற்கருணை வழங்குவது குறித்து மாமன்றத்தில் பேசப்பட்டது, ஆயினும் இவ்விவகாரத்தைப் பொதுப்படையாக நோக்காமல், தனித்தனியாகப் பார்க்க வேண்டும், அதேநேரம், திருஅவை கோட்பாடுகளை மறக்காமல், கருணைப் பண்பை மனதில் வைத்து செயல்பட வேண்டுமெனவும் கூறினார் முதுபெரும் தந்தை Fouad Twal.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.