2015-10-20 15:35:00

திருத்தந்தை:இறைவன் நம்மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையில்லை


அக்.20,2015. இறைவன் நம்மீது வைத்துள்ள அன்புக்கு எல்லைகளே இல்லை, ஆனால், மனிதருக்கு இத்தாராள மனப்பான்மை குறைபடுகின்றது மற்றும் மனிதர் சூழ்நிலைகளைக் கணக்கிடும் போக்கைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய் காலையில், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய இந்நாளின் முதல் வாசகத்தை(உரோ.5:12,15,17-21) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவன் நம்மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பு குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

இறைவன் நம்மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பை மனித அன்போடு ஒப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, நமக்குச் சொந்தமான ஒன்றை நாம் கொடுப்பதற்குத் தீர்மானிக்கும்போது அதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறோம், அதை மதிப்பீடு செய்கிறோம் என்றும் கூறினார்.

இறைவன் ஒரே இடத்தில் நிற்காமல், நம் ஒவ்வொருவரையும் தேடிச் செல்கிறார்  என்றும், நமக்கும், இறைவனுக்கும் இடையே நிலவும் நட்பை வைத்தே நம் மீட்பு உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் இதயம் எப்போதும் திறந்தே இருக்கின்றது, இறைவன், குறுகிய மனப்பான்மையுடையவர் அல்லர், குறுகிய மனப்பான்மை பற்றி அவருக்குத் தெரியாது, அவர் எல்லாவற்றையும் அளிக்கிறார், நாம் மனம் மாறி வருவதைக் கவனித்துக்கொண்டிருக்கிறார், அதற்காக காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறைவனின் அன்பைப் புரிந்துகொள்ளவும், அவரின் எல்லையற்ற அன்பால் நாம் அரவணைக்கப்பட ஆவல் கொள்ளவும் இத்திருப்பலியில் செபிப்போம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.