2015-10-19 16:01:00

வெறுப்புணர்வைக் கைவிடுவதற்கு துணிச்சலும், மனஉறுதியும் தேவை


அக்.19,2015. இஞ்ஞாயிறு திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காழ்ப்புணர்வையும் பழிவாங்கும் உணர்வையும் கைவிட்டு அமைதிக்கான நடவடிக்கைகளை தெளிவான முறைகளில் மேற்கொள்வதற்கு துணிச்சலும், மனஉறுதியும் தேவை என்றும் கூறினார்.

மத்திய கிழக்கின் தற்போதைய சூழலில், எக்காலத்தையும்விட இப்போது இறைவனுக்கும், மனித சமுதாயத்தின் நலனுக்கும் அமைதி தேவைப்படுகின்றது   என்றுரைத்த திருத்தந்தை, புனித பூமியில் இந்நாள்களில் காணப்படும் பதட்டநிலை மற்றும் வன்முறைச் சூழல்களை, தான் மிகுந்த கவலையோடு கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.

அரசுகளும், குடிமக்களும் வன்முறையைத் துணிச்சலுடன் எதிர்த்து, நிலைமையை அமைதிப்படுத்துவதற்குத் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இறைவன் அவர்களுக்குச் சக்தியைக் கொடுக்க வேண்டுமென்று செபிப்போம் எனவும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலியில் கலந்து கொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மேலும், புதிய புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக திருப்பலியில் கலந்து கொண்டவர்களுக்கு, குறிப்பாக, இத்தாலி, இஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து வந்திருந்த அரசுகளின் பிரதிநிதிகளுக்கும், திருப்பயணிகளுக்கும் தனது வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.