2015-10-19 15:47:00

திருத்தந்தை:பணத்தின்மீது அன்பு செலுத்துவது சிலை வழிபாடாகும்


அக்.19,2015. இயேசு செல்வத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கவில்லை, ஆனால் குடும்பங்களைப் பிரித்து போர்களுக்குக் காரணமாகும் செல்வத்தின்மீதான பற்றையே கண்டனம் செய்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலையில், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களை(உரோ.4:20-25;லூக்.12:13-21) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவனுக்கும் செல்வத்திற்கும் நாம் ஒரே நேரத்தில் ஊழியம் புரிய முடியாது என்பதை விசுவாசிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இயேசு செல்வத்திற்கு எதிராகப் பேசவில்லை, ஆனால், ஒருவர் தனது பாதுகாப்பை பணத்தில் வைப்பதற்கு எதிராகப் பேசினார், செல்வத்தை இவ்வாறு ஒருவர் சேமித்து வைப்பது, மதத்தை, ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக மாற்றும் ஆபத்தாக உள்ளது     என்று கூறினார் திருத்தந்தை.

சொத்துக்காக எத்தனை குடும்பங்கள் சண்டையிட்டு, தங்களுக்கிடையே ஒரு வணக்கம்கூட சொல்லாமல் ஒருவர் ஒருவரை வெறுத்து வாழ்வதைப் பார்க்கிறோம், குடும்ப அன்பு, பிள்ளைகள் அன்பு, பெற்றோர், உறவுகள் அன்பு மிகவும் பெரிதாக இல்லாமல் பணமே முக்கியமாக இருக்கின்றது, இது அழிவைக் கொண்ர்கின்றது, நாம் இக்காலத்தில் காணும் போர்களுக்குப் பின்புலத்தில் பணமே இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை. பணத்திற்காக ஆயுத வர்த்தகம் நடக்கின்றது, இந்த வர்த்தகர்கள் போரிலிருந்து பணத்தை ஆதாயமாகப் பெறுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழையரின் உள்ளம் பற்றிய இயேசுவின் மலைப்பொழிவு பற்றிப் பேசிய திருத்தந்தை, செல்வத்தின்மீது பற்று இல்லாதவர்கள் அதனைப் பிறரின் பணிக்காகச் செலவழிக்க முன்வருவார்கள், அச்செயல், சிலைவழிபாடு என்ற பாவத்தில் விழாமல் இருப்பதன் அடையாளமாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர் தனக்கு எஞ்சியதிலிருந்து கொடுப்பதல்ல, ஆனால் தன்னை வருத்தும் அளவுக்குத் தர்மம் செய்ய வேண்டும், நான் கொடுக்கின்றேனா, எவ்வளவு கொடுக்கின்றேன், எப்படி கொடுக்கின்றேன், இயேசு கொடுப்பதுபோல் நான் கொடுக்கின்றேனா என்ற கேள்விகளையும் ஒவ்வொருவரும் கேட்குமாறு விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவருக்குக் கொடுக்கும்போது அவரது கண்ணைப் பார்த்து கொடுக்கின்றேனா, அந்த நபரின் கையைத் தொடுகின்றேனா, அவர்கள் கிறிஸ்துவின் சொந்த சதை, அவர்கள் உங்கள் சகோதர சகோதரிகள் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

சிலை வழிபாடாகிய பணத்தின்மீது பற்று வைக்காதிருப்பதற்கு இயேசுவிடம் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.