2015-10-17 15:34:00

கடுகு சிறுத்தாலும் - "பதவி என்பது, பணி செய்வதற்கே"


அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த நேரம். ஒரு நாள் அமெரிக்க அரசுத்தலைவர், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள், சாதாரண உடையணிந்து, தன் குதிரையில் ஏறிச்சென்றார். போகும் வழியில், ஒரு தளபதியின் குதிரைவண்டி சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று கொண்டிருந்தனர். தளபதியோ அருகில் நின்று அவர்களுக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வாஷிங்டன் அவர்கள், தளபதியிடம், "ஏன் நீங்களும் இறங்கி உதவி செய்தால் வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன் அவர்கள், குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சி செய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர் தளபதியிடம் "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் அரசுத்தலைவரைக் கூப்பிடுங்கள்... நான் வந்து உதவி செய்கிறேன்" என்று சொல்லி, தளபதியின் கையைக் குலுக்கினார். அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.

"பதவி என்பது, பணி செய்வதற்கே" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைத் தலைவராகப் பொறுப்பேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.