2015-10-17 15:47:00

ஒன்றுசேர்ந்த பயணத்திற்கு துணையாய் இருப்பது செவிமடுத்தல்


அக்.17,2015. திருஅவையில், ஒவ்வொருவருக்கும் இடமிருக்கிறது, எல்லாரும் ஒன்றுசேர்ந்து பயணம் செய்வதற்கு திறவுகோலாய் இருப்பது செவிமடுத்தல், ஒரு மாமன்றத் திருஅவை என்பது செவிசாய்க்கும் திருஅவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இடம்பெற்ற உலக ஆயர்கள் மாமன்றம் நிறுவப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, மூன்றாம் மில்லேன்யத் திருஅவை குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.

விசுவாசிகள், ஆயர்கள், உரோம் ஆயராகிய திருத்தந்தை என ஒவ்வொருவரும் பிறர் சொல்வதற்குச் செவிசாய்க்க வேண்டும் மற்றும், இந்த எல்லா செவிமடுத்தல்களுமே, உண்மையின் ஆவியானவராகிய தூய ஆவியார் திருஅவைகளுக்கு என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காகவே என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக ஆயர்கள் மாமன்றம், திருஅவையின் இயல்பு மற்றும் அதன் பணிகளை வெளிப்படுத்தும் அமைப்பாக உள்ளது என்று சொல்லி, அதன் நடைமுறைகள் மற்றும் அதன் கூறுகளையும் விளக்கிய திருத்தந்தை, ஒன்றுசேர்ந்து பயணிக்கும்பொழுது பாப்பிறைப் பணி இன்னும் அதிக ஒளிபெறும் என்றும் கூறினார்.

மாமன்றம் என்ற சொல்லுக்கு ஒன்றிணைந்து பயணிப்பது என்று விளக்கமளித்த திருத்தந்தை, பொதுநிலையினரும், மேய்ப்பர்களும், உரோம் ஆயரும் ஒன்றிணைந்து பயணிப்பது என்ற கருத்தியல், வார்த்தையால் சொல்வதற்கு எளிதாக இருக்கின்றது, ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு அவ்வளவு எளிதானதல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.

மாமன்றம் என்பது, எப்போதும் பேதுருவோடும், பேதுருவின் கீழும் செயல்படுவதாகும், ஆயினும் இது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை, மாறாக, ஒன்றிப்புக்கு உறுதியளிக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், உண்மையில், திருத்தந்தை, நம் ஆண்டவரின் திட்டத்தால், ஆயர்கள் மற்றும் விசுவாசிகளின் ஒன்றிப்பின் நிரந்தரமான மற்றும் காணக்கூடிய அடித்தளமாக இருக்கிறார் என்றும் உரையாற்றினார். 

1965ம் ஆண்டு அருளாளர் ஆறாம் பவுல் அவர்களால் உலக ஆயர்கள் மாமன்றம் உருவாக்கப்பட்டது. இச்சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற இதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், குருக்கள், துறவிகள் பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.