2015-10-17 15:59:00

உலக ஆயர்கள் மாமன்றத்தின் 50ம் ஆண்டு நிறைவு நிகழ்வு


அக்.17,2015. இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இடம்பெற்ற உலக ஆயர்கள் மாமன்றம் நிறுவப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு நிகழ்வில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, காபோன் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Mathieu Madega Lebouakehan, பசிபிக் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Soane Patita P. Mafi, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ, பிரிட்டன் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn, சிலே நாட்டு சந்தியாகோ பேராயர் கர்தினால் Ricardo Ezzati Andrello போன்றோர் உரையாற்றினர்.

அருளாளர் ஆறாம் பவுல் அவர்களால் 1965ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி விளக்கிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், 14 பொது மாமன்றங்கள், 3 சிறப்பு பொது மாமன்றங்கள், 10 சிறப்பு மாமன்றங்கள் என்று, இதுவரை திருஅவையில் 27 உலக ஆயர்கள் மாமன்றங்கள் நடைபெற்றுள்ளன என்று கூறினார்.

தற்போதைய உலகில் திருஅவையின் மேய்ப்புப்பணியைப் புதுப்பிக்கும் கண்ணோட்டத்தில் இவை இடம்பெற்றன என்றும், 27 உலக ஆயர்கள் மாமன்றங்களில் மூன்று குடும்பங்கள் பற்றியவை என்றும் கூறினார் கர்தினால் பால்திச்சேரி.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய கர்தினால் Christoph Schönborn அவர்கள், மாமன்றத்தின் நடைமுறை குறித்து விளக்கி, மாமன்றம் என்பது ஒன்றுசேர்ந்து பயணிப்பதாகும் என்றார்.

பசிபிக் பகுதியின் ஆயர் பேரவைத் தலைவரான டோங்கோ ஆயர் கர்தினால் Mafi அவர்கள் உரையாற்றியபோது, ஓசியானியாவில் திருஅவையின் வாழ்வுக்கும் பணிக்கும் ஆயர்கள் மாமன்றங்கள் எவ்விதத்தில் உதவியுள்ளன என்று எடுத்துரைத்தார்.   

தற்போது வத்திக்கானில் நடைபெற்றுவரும் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், இச்சனிக்கிழமை மாலை குழுக்களாக, கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.