2015-10-16 16:41:00

வெளிவேடம் என்ற நோய்க்கிருமி குறித்து விழிப்பாயிருங்கள்


அக்.16,2015. நிழல்களில் ஒளிந்துகொண்டு, பொய்களோடு மயக்கும் தன்னையே நேர்மையாளர் என்று நோக்கும் எண்ணமாகிய வெளிவேடம் என்ற தொற்றுநோய்க் கிருமியால் தாக்கப்படாமல் இருப்பதற்கு நாம் செபிக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெளிவேடத்திற்கு நிறம் கிடையாது, மாறாக, இது மாயையை ஏற்படுத்தும் நிறங்களைக் கொண்டது, பொய்யின் அழகோடு ஒரே இடத்தில் ஒளியையும், நிழலையும் கொண்டு மயக்கவல்லது என்று கூறினார் திருத்தந்தை.

இவ்வெள்ளி காலையில், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு தம் சீடரிடம், பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று கூறிய, லூக்கா நற்செய்திப் பகுதியை(லூக்.12:1-7) மையமாக வைத்து மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புளிப்புமாவு மிகவும் சிறிய பொருள், ஆனால், இயேசு அதை தொற்று நோய்க் கிருமி என்ற அளவுக்குப் பேசுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, இந்தத் தொற்று நோய்க் கிருமியின் ஆபத்து குறித்து கவனமாக இருங்கள் என்று ஒரு மருத்துவர், தன்னோடு பணியாற்றுபவர்களிடம் சொல்வது போல் இது இருக்கின்றது என்றும் கூறினார்.

இந்தப் புளிப்புமாவு, ஒரு தொற்று நோய்க் கிருமி, அது உங்களை நோய்க்கு உள்ளாக்கி மரணத்திற்கு இட்டுச் செல்லும், எச்சரிக்கையாய் இருங்கள், இந்தப் புளிப்புமாவு இருளைக் கொணரும், விழிப்பாயிருங்கள், ஆனால் இதைவிட மேலானவர் ஒருவர் இருக்கிறார், அவரே நம் வானகத் தந்தை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிட்டுக்குருவிகளைவிட நாம் மேலானவர்கள், எனவே அஞ்ச வேண்டாம், நம்மீது அக்கறை செலுத்தும் வானகத் தந்தை இருக்கிறார், அவர் நம்மை அன்புகூர்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, தன்னையே நேர்மையாளர் என்று கருதுவதில் வீழ்ந்துவிடாமல் இருப்பதே இத்தொற்றுநோயால் தாக்கப்படாமல் இருப்பதற்கு ஒரே தீர்வு என்றும் கூறினார்.

இந்நோயிலிருந்து திருஅவையையும், நம்மையும் இயேசு காப்பாற்றுமாறு செபிப்போம் என்றும் மறையுரையில் கூறினார் பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.