2015-10-16 16:59:00

மாமன்றத்தின் 12வது பொது அமர்வில் பிற கிறிஸ்தவ சபைகள்


அக்.16,2015. இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 12வது பொது அமர்வில் பிற கிறிஸ்தவ சபைகளின் 12 பிரதிநிதிகள் உரையாற்றினர்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை STEPHANOS, செர்பிய முதுபெரும் தந்தை  ANDREJ, ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை IOSIF, அலெக்ஸ்சாந்திரிய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை BISHOY, அந்தியோக்கியாவின் சீரோ-ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை YOUSTINOS BOULOS, ஆங்கிலக்கன் கூட்டமைப்பின் பேராயர் Timothy THORNTON, உலக லூத்தரன் கூட்டமைப்பின் பேராயர் Ndanganeni Petrus PHASWANA, உலக மெத்தடிஸ்ட் அவையின்  Tim MACQUIBAN, கிறிஸ்துவின் சீடர்கள் சபையின்  Robert K. WELSH, உலக பாப்டிஸ்ட் கூட்டமைப்பின் A. Roy MEDLEY, உலக இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பின் Thomas SCHIRRMACHER, பிரேசில் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் Walter ALTMANN போன்றோர் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓரினச் சேர்க்கை மாபெரும் பாவம், இது இறைவனால் தடைசெய்யப்பட்டுள்ளது என்று மறைநூல்கள் கூறுகின்றன, இத்தகைய போக்கு உள்ளவர்கள் மனம் வருந்தி தூய வாழ்வு வாழும் வழிகளைக் காட்டுவது திருஅவையின் முக்கிய மேய்ப்புப்பணியாக உள்ளது என்று, எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை BISHOY கூறினார்.

இம்மாமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டனின் ஆங்கிலக்கன் கூட்டமைப்பின் பேராயர் Timothy THORNTON அவர்கள், தங்களின் சபை பாரம்பரியக் குடும்பங்கள் குறித்த புரிதல்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என்றும், நாம் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறோம், உலகில் நம் குடும்பங்களிலும் நம்மிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நாம் அதிகமாக கவலைப்படத் தேவையில்லை என்றும் பகிர்ந்து கொண்டார்.

145 லூத்தரன் சபைகள் சார்பாக உரையாற்றுவதாக, இவ்வெள்ளி காலை பொது அமர்வில் தெரிவித்த தென்னாப்ரிக்க லூத்தரன் சபை கூட்டமைப்பின் Petrus PHASWANA அவர்கள், இன்றைய உலகில் நற்செய்தியின் குணப்படுத்தும் வல்லமையும், நல்லுறவுகளுக்கான அழைப்பும் முக்கியமானவை என்று கூறினார்.

அரசியல், மதம் மற்றும் கலாச்சாரம், மக்களையும் நாடுகளையும் பிரிப்பதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன, இச்சூழலில் கிறிஸ்துவோடும் பிறரோடும் ஒன்றித்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு நாம் சாட்சிகளாக வாழ இறைவன் விரும்புகிறார் என்றும் கூறினார் PHASWANA.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 








All the contents on this site are copyrighted ©.