2015-10-16 16:54:00

சாலைகளின் அருள்பணியாளராகவே எப்போதும் இருக்கிறேன்


அக்.16,2015. சாலைகளின் அருள்பணியாளராகவே எப்போதும் இருக்கிறேன், இயேசுவின் சில முக்கியமான சந்திப்புகள் சாலைகளிலே இடம்பெற்றன, உரோம் நகரத் தெருக்களில் சுற்றிவர விரும்புகிறேன், உரோம் அழகான நகரம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாதாரண அருள்பணியாளர் உடையில் உரோமில் பேருந்தில் செல்வது, பிட்சா சாப்பிடுவது, லூயிஸ் மார்ட்டின், மரி செலி ஆகிய இருவரைப் புனிதர்களாக அறிவிப்பது, பிற கோளங்களில் மனிதரின் வாழ்வு உட்பட பல்வேறு தலைப்புகளில் ப்ரெஞ்ச் பத்திரிகையாளர் Caroline Pigozzi அவர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

வெள்ளை நிற உடுப்பில் இருந்தாலும், கறுப்பு நிற அருள்பணியாளரின் ஆடையை, தான் முழுவதுமாக விட்டுவிடவில்லை என்றும், நண்பர்களோடு வெளியில் சென்று நல்ல பிட்சா சாப்பிட விரும்புகிறேன், ஆனால் இப்போதைக்கு அது தனக்கு இயலாதது என்றும் கூறினார் திருத்தந்தை.

புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர் மார்ட்டின் தம்பதியர் தங்கள் வாழ்வு முழுவதும், தங்கள் இல்லத்திலும், வெளியிலும், இயேசுவில் நம்பிக்கை வைப்பதன் அழகுக்குச் சான்று பகர்ந்தவர்கள், இவர்கள் நற்செய்தி அறிவிக்கும் தம்பதியர், ஏழைகளுக்குத் தங்கள் இதயத்தையும், இல்லத்தையும் திறந்தவர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரிஸ் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் Caroline Pigozzi, இத்தாலியத்தில் திருத்தந்தையிடம் எடுத்த நேர்காணல், இத்தாலியம் மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

89வது மறைபரப்பு ஞாயிறான அக்டோபர் 18 அன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், 14வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையருடன் இணைந்து நிறைவேற்றும் திருப்பலியில் மார்ட்டின் தம்பதியரைப் புனிதர்களாக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஜூலையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமியைப் போன்ற, கெப்லர் 452B என்ற புதிய கோளத்தைக் கண்டுபிடித்திருப்பது பற்றிக் கேட்டபோது, அறிவியலாளர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும், இருந்தபோதிலும், நம் அறிவைவிட படைத்தவராம் இறைவன் எல்லையற்று பெரியவராக உள்ளார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் வாழ்கின்ற இந்தப் பிரபஞ்சமும், உலகும், தற்செயலாக நிகழ்ந்ததோ அல்லது ஒழுங்கற்ற நிலையால் அல்ல, ஆனால் இறைவனின் பேரறிவால் நிகழ்ந்தது என்றும் என்றும் கூறினார் திருத்தந்தை.

பாரிசில் நடைபெறவிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு, தொலைநோக்கு கொண்ட, பகிரப்பட்ட மற்றும் தெளிவான திட்டங்களை நம் பொது நலனுக்காக வகுக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் இந்நேர்காணலில் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.