2015-10-16 15:35:00

கடுகு சிறுத்தாலும்.. : இயல்பான மாற்றம் மலரட்டும்


வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, அதை எடுத்துத் தரும்படி தனது தாத்தாவிடம் கேட்டான் பேரன். தாத்தா எடுத்து தந்தார். ‘தாத்தா... இது மாதிரி புதுசு எனக்கு வாங்கிக் குடுங்க தாத்தா’ ஆர்வமாய் கேட்டான் பேரன் மூர்த்தி. ‘இது இப்போ கிடைக்கிறதில்லப்பா... அந்தக் காலத்துல பனை மரம் ஏறி ஓலை வெட்டிப் போட்டு, அந்த ஒலையில பெட்டி செய்தாங்க. இப்போ பனை மரம் ஏறுறவங்க கிடைக்காததனால ஓலைப் பெட்டி முடையிற தொழில யாரும் செய்றதில்ல’ விளக்கம் சொன்னார் தாத்தா. ‘அந்த தொழில் செஞ்சவங்க இப்போ வருமானத்துக்கு என்ன செய்வாங்க’ என கேள்வி கேட்டான் மூர்த்தி. ‘வேறு ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க’ என பதிலளித்தார் தாத்தா. ‘இது மாதிரிதானே தாத்தா, சாராயம் காய்ச்சுற தொழிலும். இந்த தொழிலே இல்லாமப் போனா அவங்க வேற தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க. வயிற்று பொழைப்புக்கும், வருமானத்துக்கும் என்று செய்யிற இந்த தொழிலால எத்தனை உயிர் பலியாகுது, எத்தனைக் குடும்பங்கள் சீரழியுது. இந்த தொழில் மூலமா பல பேருக்கு வேலை கொடுக்கிறதா நினைச்சுக்கிட்டு சாராயம் காய்ச்சுற தொழில நடத்தறீங்களே. அத நிறுத்தக் கூடாதா’, கேட்டான் பேரன். அவனது கேள்வியில் ஒரு நிமிடம் மௌனமாகி, சாராயம் காய்ச்சும் தொழில் நடத்தும் எண்ணத்தை கைவிடத் தீர்மானித்தார் தாத்தா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.