2015-10-15 16:08:00

மியான்மார் அரசு, சிறுபான்மை குழுக்களுக்கு இடையே ஒப்பந்தம்


அக்.15,2015. மியான்மார் அரசு அந்நாட்டின் எட்டு தேசிய ஆயுதம் ஏந்திய சிறுபான்மை குழுக்களுடன் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் ஒன்றில் இவ்வியாழனன்று கையெழுத்திட்டுள்ளது.

மியான்மாரின் சில பகுதிகளில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் முயற்சியாக இந்த ஒப்பந்தத்தில் மியான்மார் அரசு கையெழுத்திட்டுள்ளது.

மியான்மார் அரசுத் தலைவர் தெயின் செயின் அவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மியான்மாரில், வருகிற நவம்பர் 8ம் தேதி பொதுத்தேர்தல்கள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 135 இனக் குழுக்கள் வாழும் மியான்மாரில், அமைதியான நல்லிணக்க வாழ்வு மத்திய அரசுக்கு எப்போதும் போராட்டமாகவே உள்ளது என ஊடகங்கள் கூறுகின்றன. 1948ம் ஆண்டில் பிரித்தானியாவிடமிருந்து மியான்மார் விடுதலை அடைந்ததிலிருந்து, சுயஆட்சி கோரும் பல்வேறு குழுக்களுடன் மத்திய அரசு போராடியே வருகிறது.   

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.