2015-10-15 16:02:00

சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம்


அக்.15,2015. சிரியாவில் இடம்பெறும் சண்டையில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு பிரித்தானிய அரசியல்வாதிகள் ஆதரவளிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார் சிரியாவின் அலெப்போ பேராயர் Jean-Clement Jeanbart.

சிரியா அரசுத்தலைவர் பஷீர் அல்-அசாத் அவர்களுக்கு எதிராகப் போராடும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருந்தால், சிரியா, கடந்த அறுபது ஆண்டுகளாக, நவீன சமயச் சார்பற்ற நாடாக மாறுவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் அழிக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்தார் அலெப்போ கிரேக்க மெல்கிதே வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராயர் Jeanbart.

துயருறும் திருஅவைக்கு உதவி என்ற கத்தோலிக்க அமைப்பின் ஏற்பாட்டால், பிரித்தானிய பிரபுக்கள் அவை உறுப்பினர்களை இவ்வாரத்தில் சந்தித்துப் பேசிய பேராயர் Jeanbart அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

சிரியாவில் இரஷ்யாவின் தற்போதைய இராணுவத் தலையீடு, அந்நாட்டில் இடம்பெற்றுவரும் நான்காண்டு சண்டை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துள்ளது என்றும் கூறினார் பேராயர் Jeanbart.

விடுதலை, குடியுரிமை, சமய சுதந்திரம், சனநாயகம் ஆகியவை பற்றி ஏதாவது பேசும் எல்லாரையும் இஸ்லாம் தீவிரவாதிகள் கொலை செய்கின்றனர் என்றும் பிரித்தானிய அரசியல்வாதிகளிடம் கூறினார் அலெப்போ பேராயர் Jeanbart.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.