2015-10-15 15:49:00

சட்ட அறிஞர்கள் இறைவனின் அன்பின் எல்லையை குறைக்கின்றனர்


அக்.15,2015. இலவசமாக வழங்கப்படும் இறைவனின் மீட்பைக் கட்டுப்படுத்துபவர்கள் மற்றும் இறைவனின் அன்பை மனிதரின் நிலைக்குக் கொண்டு வருபவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கு ஐயோ கேடு, ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் தடுக்கிறீர்கள் என்று லூக்கா நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், எல்லாச் சட்டங்களையும் மதிப்பதால் ஒருவர் மீட்புப் பெற முடியும் என்று திருச்சட்ட அறிஞர்கள் நம்புவதால், இறைவன்   இலவசமாக வழங்கும் மீட்புக் கொடையின் சாவியை அவர்கள் எடுத்து விடுகிறார்கள் என்று கூறினார் திருத்தந்தை.

சட்டங்களைக் கடைப்பிடிக்காதவர்கள் கண்டனத்துக்கு உள்ளாவார்கள் என்பது திருச்சட்ட அறிஞர்களின் எண்ணம், இவ்வாறு அவர்கள் இறைவனின் எல்லைகளையும், அவரின் அன்பையும் மிக மிகச் சிறியதாக, வரையறைக்கு உட்படுத்துகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரையறைக்கு உட்படுத்தப்பட்ட அன்பு அன்பாகாது, அது சுயநலத்தோடு சேர்ந்தது என்றும், இதனாலேயே இயேசு, இறைவனை முழு இதயத்தோடும், முழு பலத்தோடும், உன் வாழ்வு முழுவதும் அன்புகூர்வாயாக, உன்னைப் போல் உன் பிறரையும் அன்புகூர்வாயாக என்று சொல்லியிருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனால் இலவசமாக மீட்கப்பட்டுள்ளேன் என்பதையும், அந்த மீட்புக்குப் பலனாக நாம் ஏதும் செய்யவில்லை என்பதையும் நாம் நம்புகிறோமா என்ற கேள்வியையும் மறையுரையில் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.