2015-10-15 16:18:00

உலக உணவு தினம் அக்டோபர் 16


அக்.15,2015. உலகில் பசியை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து உழைப்பதற்கு நமது அர்ப்பணத்தை இந்த உலக நாளில் மீண்டும் உறுதி செய்வோம் என்று, உலக உணவு தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

அக்டோபர் 16, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்படும் 35வது உலக உணவு தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், பசியாக இருப்பது, பயங்கரமான அநீதியாகும் என்று கூறியுள்ளார் பான் கி மூன்.

மாண்பும், வளமையும் நிறைந்த நலமான புவியை உருவாக்குவதற்கு உலகத் தலைவர்கள் 2030ம் ஆண்டை நோக்கிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை உருவாக்கியுள்ள இவ்வாண்டில் இவ்வுலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், பசியாக இருப்பது உணவு இல்லாமல் இருப்பதைவிட கொடுமையானதாகும் என்றும் கூறியுள்ளார்.

உலகில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுள்ள மக்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பாதியாகக் குறைந்துள்ளது, அதேநேரம், உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி வீணாக்கப்படுகின்றது என்றும் ஐ.நா.பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.

உலகில் எல்லாருக்கும் உணவளிக்கப் போதுமான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், இன்னும் ஏறக்குறைய எண்பது கோடிப் பேர் பசியினால் வாடுவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.

1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO) உருவாக்கப்பட்டது. இந்நாளில் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நாடுகள் உலக உணவு தினத்தைச் சிறப்பிக்கின்றன. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.