2015-10-15 15:53:00

14வது உலக ஆயர்கள் மாமன்றம்- பத்திரிகையாளர் சந்திப்பு


அக்.15,2015. இவ்வியாழன் காலை தொடங்கிய குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது அமர்வில் 93 பிரிதிநிதிகள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று கூறினார் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

 மேலும், குடும்பங்கள், தங்களின் பணியையும் அழைப்பையும் புரிந்துகொள்வதற்கு உதவியாக, மாமன்றத்தின் தொகுப்பில் விவிலியப் பகுதிகள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்று, 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் சிறிய குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன.

குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 13 சிறிய குழுக்கள், மாமன்றத்தின் விவாதத் தொகுப்பின் 2வது பகுதியின் மூன்று பிரிவுகள் குறித்த கலந்கதுரையாடல்களை முடித்து அதன் அறிக்கைகளையும் இப்புதன் பொது அவையில் சமர்ப்பித்துள்ளன. 

இவை குறித்து இப்புதன் பத்திரிகையாளர் கூட்டத்தில், அருள்பணி லொம்பார்தி அவர்களுடன், Westminster கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், பொகோட்டா கர்தினால் Rúben Salazar Gómez, Ouagadougou பேராயர் கர்தினால் Philippe Ouédraogo ஆகியோரும் கலந்து கொண்டு இம்மான்றம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

திருமணத்தின் பிளவுபடாத தன்மை, ஒரு சுமையாக நோக்கப்படாத வண்ணம், நம்பிக்கை மற்றும் மகிழ்வை அதிகமாக ஊட்டும் விதத்தில் வழங்கப்பட வேண்டுமென்று பல குழுக்கள் பரிந்துரைத்துள்ளன என்று இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

திருஅவை, திருமணம் பற்றிய இறையியலைக் கொண்டுள்ளது, ஆயினும், திருமணம் பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட இறையியல் இல்லை என்று ஒரு குழு கூறியது கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உலக ஆயர்கள் மாமன்றம், கத்தோலிக்கத் திருஅவைக்கு மிகமிக முக்கியமானது, ஏனென்றால், அனைத்து விதமான குடும்பங்களின் குரல்கள் இம்மாமன்றத்தில் செவிசாய்க்கப்படுகின்றன என்று கூறினார் கர்தினால் Salazar.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.