2015-10-14 16:15:00

புதன் மறைக்கல்வி உரை – குழந்தைகளும், நம் வாக்குறுதிகளும்


அக்.14,2015. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் இடம்பெற்றுவரும் இந்நாட்களில், இப்புதனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஏறக்குறைய நாற்பதாயிரம் திருப்பயனிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம் குறித்தே தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி போதனையில் இன்று, குழந்தைகளை இவ்வுலகிற்குக் கொணர்வதன் வழியாக நாம் அவர்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் குறித்து சிந்திப்போம். இதில் மிக முக்கியமானது அன்பு. தான் அன்பு கூரப்படுவேன், தன் மீது அக்கறை காட்டப்படும் என்பதை ஒவ்வொரு குழந்தையும் நம்புகிறது. இத்தகைய வாக்குறுதி, மீறப்படும்போது அது இடறலாகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கும் இயேசு, 'கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்போதும் இருக்கின்றார்கள்' என உரைக்கிறார். திருஅவையும் திருமுழுக்கின்போது நம் குழந்தைகளுக்கு வாக்குறுதிகளை வழங்குகின்றது. இந்த வாக்குறுதிகள், பெற்றோர்களாலும், கிறிஸ்தவ சமூகம் முழுமையாலும் நிறைவேற்றப்பட வேண்டும். மனிதகுல அனபை அனுபவிக்கும் ஒவ்வொரு குழந்தையும், குழந்தைகளை அன்புகூரும் இறைவனின் அருகாமையை உணர்கின்றன. இந்த இளையோரின் வாழ்வில் இறைவனுக்கான இடத்தை உருவாக்கி, இறைவனுக்கும், குழந்தைகளுக்கும் இடையே வியப்பு தரும் உறவைப் பேணி, ஊக்கப்படுத்துவது நமக்கு இன்றியமையாதது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் அன்பிலும், அந்த அன்பு வழியாகவும், அக்குழந்தைகள், இறைவனின் குழந்தைகள் என்ற தங்கள் தனித்துவத்தை உணர்ந்து பாராட்ட அவர்களுக்கு உதவுகின்றனர். நாம் குழந்தைகள்போல் மாறவேண்டும் என இயேசு நமக்குக் கற்பித்தார். குழந்தைகளிலும், அவர்கள் வழியாகவும் மனித குலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள மிகப்பெரும் வாக்குறுதியை, நாம், நம் குழந்தைகளையும் குடும்பங்களையும் பாதுகாப்பதன் வழியாக நிறைவேற்றுவோமாக.

இவ்வாறு புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.