2015-10-14 17:25:00

துயருறும் திருஅவை உதவி அமைப்பின் அறிக்கைக்குப் பாராட்டு


அக்.14,2015. உலக அளவில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்து உலகுக்கு அறிவிக்கும் முயற்சியை எடுத்துள்ள துயருறும் திருஅவைக்கு உதவி என்ற கத்தோலிக்க அமைப்பைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தங்களின் விசுவாசத்திற்காக நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள இவ்வமைப்பைப் பாராட்டியுள்ளதோடு, இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு உதவிய எல்லாருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

Aid to the Church in Need என்ற துயருறும் திருஅவைக்கு உதவும் அமைப்புக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திருத்தந்தையின் பெயரால் இப்பாராட்டுச் செய்தியை அனுப்பியுள்ளார்.

மனித மாண்புக்கும், மத சுதந்திரத்திற்கும் எதிராக நடக்கும் அடக்குமுறைகள் நிறுத்தப்பட, பன்னாட்டு அளவில் முயற்சிகள் எடுக்கப்படுமாறும், உலகெங்கும் துன்புறும் சகோதர சகோதரிகளுக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கப்படுமாறும் ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1947ம் ஆண்டு அருள்பணி Werenfried van Straaten அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட துயருறும் திருஅவைக்கு உதவி என்ற கத்தோலிக்க அமைப்பு, 2014ம் ஆண்டில் 21 நாடுகளில் 10 கோடியே 50 இலட்சம் யூரோக்களைத் திரட்டி, 145 நாடுகளில் 5,614 திட்டங்களுக்கு உதவியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.