2015-10-14 17:39:00

தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு வலியுறுத்தல்


அக்.14,2015. இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையுமின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யுமாறு இப்புதனன்று இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

கொழும்பு மத்திய இரயில் நிலையம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்களும், கைதிகளின் உறவினர்களும் அமைதியான போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இலங்கையில் பல்வேறு சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள கைதிகளுக்கு ஆதரவாக இப்புதன் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கையில் இனப்போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் அரசு விடுதலை செய்யுமாறு இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சம உரிமை இயக்கப் பேச்சாளர் Sanjeewa Bandara கூறுகையில், ஏறக்குறைய முன்னூறு தமிழ்க் கைதிகள் சிறைகளில் உள்ளனர், இவர்கள் போருக்குப் பொறுப்பானவர்கள் அல்ல, ஆனால் போரின் பலிகடாக்கள் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : AP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.