2015-10-14 16:36:00

அமைதி ஆர்வலர்கள் - 1997ல் நொபெல் அமைதி விருது பாகம் 1


அக்14,2015. நிலக்கண்ணி வெடிகளும், கொத்து வெடிகளும் இல்லாத ஓர் உலகை உருவாக்கவும், இந்த வெடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுத் தேவைகள் நிறைவேற்றப்படவும் உழைத்துவரும் அனைத்துலக நிலக்கண்ணி வெடிகள் தடை கூட்டமைப்புக்கும், உலக அளவில்  நிலக்கண்ணி வெடிகள் தடை செய்யப்படுவதற்கு அயராது உழைத்துவரும் அமெரிக்க அரசியல் ஆர்வலர் Jody Williams அவர்களுக்கும் 1997ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. 1981ம் ஆண்டில் ஒருநாள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் நகரில் ஆரம்ப நலவாழ்வு மையம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் ஜோனத்தான் ஃபைன் என்பவரை ஹார்வர்டு வரலாற்றியல் பேராசிரியர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். சிலே நாட்டில் சர்வாதிகாரி அகுஸ்தோ பினோஷேயின் கொடூர ஆட்சியில் மூன்று பிரபல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உளவியல் முறையாக, சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று தெரிவித்தார். உடனே மருத்துவர் ஃபைன் தலைமையில் பிரதிநிதி குழு ஒன்று சிலே சென்று அந்த மருத்துவர்களைச் சிறையில் பார்த்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டது. அதன் பின்னர் மருத்துவர் ஃபைன், தனது மருத்துவத் தொழிலைத் துறந்து மனித உரிமை மீறல்களால் துன்புறும் மக்களை மீட்பதற்குத் தன்னை அர்ப்பணித்தார்.

மருத்துவர் ஃபைன் தலைமையிலான குழு, சிலே நாட்டிற்குச் சென்றதன் பயனாக, குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அக்குழு சென்று அரசுத்தலைவர் மாளிகைகள், மக்களவைகள் போன்றவற்றுக்கு முன் போராடி பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு போராடியது. இக்குழு சிலே நாட்டுச் சிறையில் அந்த மூன்று மருத்துவர்களைச் சந்தித்த ஐந்து வாரங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மருத்துவர் ஃபைன் அவர்களுடன் மற்ற மருத்துவர்களும் சேர்ந்து 1983ம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான அமெரிக்க குழு ஒன்றை உருவாக்கினர். இந்த மருத்துவர்கள், 1986ம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பை ஆரம்பித்தனர். 1991ம் ஆண்டில் கம்போடியாவில் நிலக்கண்ணி வெடிகள், அப்பாவி மக்கள் வாழ்வுக்கு, குறிப்பாக சிறாருக்கு முன்வைத்த அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்து அறிக்கையையும் இந்த அமைப்பு வெளியிட்டது. உயிர்க்கொல்லி ஆயுதங்களாகிய நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் தடை செய்யப்படுமாறு இந்தக் குழு அழைப்பு விடுத்தது.

1991ம் ஆண்டில், இந்த அமெரிக்க மருத்துவர்கள் மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகள் வாச், Medico International, Handicap International, வியட்னாம் போரின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அமெரிக்க நிறுவனம், நிலக்கண்ணி வெடிகள் ஆலோசனை குழு ஆகிய ஆறு அரசு-சாரா அமைப்புகளும் இணைந்து கலந்தாலோசித்தன. நிலக்கண்ணி வெடிகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு தருவதற்கு இந்த ஆறு அமைப்புகளும் இசைவு தெரிவித்தன. இதன் பயனாக, 1992ம் ஆண்டில் ICBL என்ற அனைத்துலக நிலக்கண்ணி வெடிகள் தடை கூட்டமைப்பு உருவானது. இந்தக் கூட்டமைப்பு ஏறக்குறைய நூறு நாடுகளில் பணியாற்றி வருகின்றது. பெண்கள், சிறார், முன்னாள் படைவீரர் குழுக்கள், சமயக் குழுக்கள், சுற்றுச்சுழல் குழுக்கள், மனித உரிமைகள், ஆயுதக் கட்டுப்பாடு, அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்காக உழைக்கும் குழுக்களுடன் சேர்ந்து உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பதற்கு முயற்சித்து வருகிறது. 1997ம் ஆண்டு செப்டம்பரில் நார்வே நாட்டின் ஆஸ்லோவில் நிலக்கண்ணி வெடிகள் தடை ஒப்பந்தம் இக்கூட்டமைப்பால் முன்மொழியப்பட்டது. பின்னர் அதே ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, கானடாவின் Ottawa மாநாட்டில் 122 நாடுகள் இந்த தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2013ம் ஆண்டு சனவரி நிலவரப்படி, இதில் 161 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆயினும் வல்லரசுகள் கையெழுத்திடவில்லை. ICBL கூட்டமைப்பு எடுத்த இம்முயற்சிகளைப் பாராட்டி இதற்கு 1997ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டில் ICBL கூட்டமைப்புக்கு அறுபது நாடுகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஆதரவளித்தன. இந்த உலக ஒப்பந்தப்படி, நிலக்கண்ணி வெடிகளைத் தயார் செய்வது, பயன்படுத்துவது, சேமித்து வைப்பது, பரிமாற்றம் செய்வது தடை செய்யப்படுகிறது. நாடுகள் தங்களிடம் சேமிப்பிலுள்ள வெடிகளை நான்காண்டுகளுக்குள் அழிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் பத்தாண்டுக்குள் இவ்வெடிகளை அகற்ற வேண்டும். இவ்வெடிகள் குறித்த விழிப்புணர்வு கல்வி வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும். இவ்வெடிகளை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இதில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளும் முன்வர வேண்டும். இவ்வொப்பந்தம் அமல்படுத்த தேசிய அளவில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

ஐ.நா. மனிதாபிமான விவகாரத் துறையின் அறிக்கையின்படி, இன்று உலகில் 64 நாடுகளில், 11 கோடி நிலக்கண்ணி வெடிகள் புதையுண்டுள்ளன. இதனால் மாதத்திற்கு 800 இறப்புகள் வீதம் நடக்கின்றன மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவில் மாற்றுத்திறனாளிகளாகின்றனர். ஒரு கண்ணிவெடியை வாங்குவதற்கு மூன்று டாலர் முதல் பத்து டாலர் வரையும், அதனை அகற்றுவதற்கு முன்னூறு டாலர் முதல் ஆயிரம் டாலர் வரையும் செலவாகின்றன. இன்று உலகில், போஸ்னியா-எர்செகொவினா(3,000,000);கம்போடியா(10,000,000);குரோவேஷியா(3,000,000); எகிப்து(23,000,000);ஈராக்(10,000,000);ஆப்கானிஸ்தான்(10,000,000);அங்கோலா(15,000,000); ஈரான்(16,000,000); ருவாண்டா(250,000) ஆகிய நாடுகளில் அதிகமான அளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.