2015-10-13 15:41:00

கடுகு சிறுத்தாலும்... நவீன அகராதிகளில், நடுநிலை என்றால்...


வழக்கு ஒன்று நடந்துகொண்டிருந்தது. வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருந்த சேரன், சோழன் என்ற இரு வழக்கறிஞர்களையும், இடைவேளையின் போது, நீதிபதி தன் அறைக்கு வரும்படி அழைத்தார். அறைக்குள் நுழைந்த சேரன், சோழன் இருவரையும் நீதிபதி மாறி மாறி பார்த்தார். பின்னர், "நேற்று, இரவு வழக்கறிஞர் சேரன் என் வீட்டுக்கு வந்து, 10 இலட்சம் ரூபாயைத் தந்து, வழக்கில் தனக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று காலை, வழக்கறிஞர் சோழன் என்னை இங்கேயே சந்தித்து, 15 இலட்சம் ரூபாயைக் கொடுத்து, வழக்கில் தனக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்" என்று நீதிபதி சொன்னதும், சேரன், சோழன் இருவரும் தலையைக் குனிந்தபடி நின்றனர். சிறிது நேர மௌனத்திற்குப் பின், வழக்கறிஞர் சேரன் நீதிபதியிடம், "யுவர் ஆனர், நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்.

நீதிபதி ஒரு இலேசானப் புன்னகையுடன், "நான் என்ன செய்வதென்று தீர்மானித்துவிட்டேன். சோழன் தந்த 15 இலட்சத்தில், ஐந்து இலட்சத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, பின்னர், இந்த வழக்கில் நடுநிலையோடு தீர்ப்பளிக்கப் போகிறேன்" என்று சொன்னதும், சேரன், சோழன் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

நவீன அகராதிகளில், நடுநிலை என்ற சொல்லுக்கு புது அர்த்தங்கள் எழுதப்படுகின்றன! ஆனால், 'நடுவுநிலைமை' என்ற பிரிவில் வள்ளுவர் சொன்ன வார்த்தைகள் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன:

"தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்" 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.