2015-10-12 15:44:00

வாரம் ஓர் அலசல் – மன நலம் காப்போம்


அக்.12,2015. தலை, பெண்ணைப் போலவும், உடல் சிங்கத்தைப் போலவும் தோற்றமளிக்கும் ஸ்பின்க்ஸ் என்கின்ற அரக்கி, ஒருமுறை ஒரு விடுகதையை எல்லாரிடமும் போட்டது. சில நேரங்களில் இரண்டு கால்களாலும், சில நேரங்களில் மூன்று கால்களாலும், சில நேரங்களில் நான்கு கால்களாலும் நடப்பது எது?, எது அதிகக் கால்களில்  நடக்கும்போது, தான் மிகவும் பலவீனமாகத் திகழ்கிறது? என்று கேட்டது. இக்கேள்விக்குப் பதில் சொல்லாதவர்களையெல்லாம் அந்த அரக்கி கொன்று விட்டது. ஒடிபஸ் என்பவர், தீபஸ் நாட்டுக்குச் சென்றபோது அவரிடமும் இக்கேள்வி கேட்கப்பட்டது. மனிதர் என்று சட்டென்று பதில் சொன்னார் ஒடிபஸ். மனிதர், குழந்தையாக நான்கு கால்களில் தவழ்கின்றார். இளைஞராக இரண்டு கால்களில் உறுதியாக இருக்கின்றார். முதுமையில் கைத்தடி அவருக்குத் தேவைப்படுகிறது என்றார் ஒடிபஸ். இவர் சரியான பதிலைச் சொன்னதும் அந்த அரக்கி தற்கொலை செய்துகொண்டதாம்.

அன்பர்களே, ஸ்பின்க்ஸ் அரக்கியின் இந்த விடுகதை சற்று ஆழமான கருத்தைக் கொண்டது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிச் சொல்பவர்கள், மனிதர் நான்கு கால்களில் நடந்து பிறகு இரண்டு கால்களில் நிமிர்ந்து நின்றனர் என்கின்றனர். மனிதர் நிமிர்ந்து நின்று நடக்கத் தொடங்கியபோது மனிதரின் அறிவும் வளர்ந்தது. ஆனால் மனிதரின் அறிவு வளர வளர, மனிதரின் சார்பு நிலையும் பல நேரங்களில் அதிகமாக வருவதாகத் தெரிகின்றது. கைத்தடிகளோடு காணப்படுபவர்கள் எல்லாரும் முதுமை அடைந்துவிட்டார்கள் என்று சொல்கிறோம், ஆனால் நம் சமூகத்தில் எத்தனையோ பேர் பல மனிதக் கைத்தடிகளை ஊன்றி மற்றவர்கள் முன் வலம் வருகிறார்கள். யார் அதிகம் பேரைச் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் நான்கு கால்களால் நடப்பவர்கள், இவர்கள் தன்னிலே வலிமை குன்றியவர்கள் என்று இறையன்பு IAS அவர்கள் சொல்கிறார். எந்த விலங்கினங்கள் எல்லாம் அதிகக் கால்களுடன் இருக்கின்றனவோ அவையெல்லாம் வலிமை குறைந்தவை.  மரவட்டை, பூரான், போன்ற உயிரினங்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சிலர் தங்களை அறிமுகப்படுத்தும்போது தங்களின் அடையாள அட்டையை நீட்டி  அறிமுகம் செய்வார்கள். அந்த அடையாள அட்டைக்கு முன்புறமும் பின்புறமும் அவர்கள் வகிக்கின்ற பதவிகளும், பெற்றுள்ள பட்டங்களும் நிறைந்திருக்கும். ஆனால் தனது சுயத்தை மட்டும் சார்ந்திருப்பவர்கள் தங்களின் பெயர்களை மட்டும் சொல்லி கை குலுக்குவார்கள். இவர்களைப் போன்றவர்கள், மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடிப்பார்கள். இஞ்ஞாயிறு மாலை ஆச்சி மனோராமா அவர்களுக்கு, திரையுலகமும், பெருமளவான பொதுமக்களும் கூடி இறுதி அஞ்சலி செலுத்தி அவர்களின் உடலைத் தகனம் செய்தனர். ஆச்சி மனோராமா அவர்கள், பிறரைப் பற்றிக் குறை சொல்லாதவர்கள், யாருக்கும் தொந்தரவு தராதவர்கள், துன்புறுவோரை அணுகி நலம் விசாரிப்பவர்கள் என்றெல்லாம் அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் கூறினர். ஆம். தன்னையும், தனது உள்ளொளியையும் மட்டுமே நம்புகின்றவர்களே, உயர்வின் மடியில் அமர முடியும். ஆனால் தன்னை, உள்ளொளியை நம்பாமல் பல மனிதக் கைத்தடிகளை நம்பி வாழ்வோர் எத்தனை தடவை உயர ஏற முயற்சித்தாலும் சறுக்கி விழுந்து விடுகின்றனர். தெருவில் சுயநினைவின்றி அலைபவர் மட்டுமே மனநலம் பாதித்தவரல்லர். எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு வலம்வரும் மனிதக் கைத்தடி மனிதர்களும் மனநலம் குன்றியவர்கள்தான்.

அன்பு நெஞ்சங்களே, கடந்த சில நாள்களில் ஊடகங்களில், நாம் வாசிக்கும் மற்றும் பார்க்கும் செய்திகள், சமூகங்களில் இத்தனை பேர் மனநலம் குன்றியவர்களா என்று சிந்திக்க வைக்கின்றது. பாலஸ்தீனப் பெண்ணொருவரை இஸ்ரேல் வீரர்கள் சுடும் காணொளியொன்று இஞ்ஞாயிறன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அபுலா நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்நிகழ்வு தொடர்பில் பல முரண்பாடான தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த ஏறக்குறைய 500 பேர் அப்பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், இது தொடர்பில் 21 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், தாத்ரி பகுதியில் இக்லாக் என்ற அப்பாவி முஸ்லிம் முதியவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

துருக்கி நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இந்தச் சண்டையை உடனடியாக நிறுத்தக்கோரி தலைநகர் அங்காராவில் பொதுமக்கள் மத்திய இரயில் நிலைய சந்திப்புப் பகுதியில் இச்சனிக்கிழமையன்று அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் திரண்ட இந்த ஊர்வலம் தொடங்கிய சிறிது நேரத்தில், தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் அங்கு ஊடுருவி தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்தத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அங்காராவில் இடம்பெற்ற இந்தக் கொடுமையான செயல் மிகுந்த கவலையைக் கொடுத்துள்ளது. இதில் பலியானவர்களுக்காகச் செபிப்போம். அமைதிக்காக ஊர்வலம் மேற்கொண்டவர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று சொல்லி சிறிது நேரம் மௌனமாக செபித்தார் திருத்தந்தை. விசுவாசிகள் அனைவரும் தன்னுடன் சேர்ந்து செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdogan அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியிலும், திருத்தந்தை தனது ஆழ்ந்த வருத்தத்தையும், செபத்தையும் தெரிவித்துள்ளார்.

அன்பு நெஞ்சங்களே, அக்டோபர் 13, இச்செவ்வாயன்று அனைத்துலக இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இயற்கைப் பேரிடர்களுக்கு மனிதர்களின் பேராசையும் ஒரு காரணம். சமயத் தீவிரவாதம், இனத் தீவிரவாதம் என ஒருபக்கம் எண்ணற்ற மக்கள் தினமும் குண்டு வெடிப்புக்களுக்குப் பலியாகி வருகின்றனர். நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை மனிதர் பலவிதங்களில் மாசுபடுத்துவதால் தினமும் புதுப்புது பதிரான நோய்களால் மக்கள் தாக்கப்பட்டு இறக்கின்றனர் மற்றும் துன்புறுகின்றனர். இப்புவி வெப்பமடைதலால் புதிரான சிறுநீரக நோய்ப் பாதிப்பு தற்போது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பரவி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உயிரினங்களின் துன்பத்திற்கும், அழிவுக்கும் காரணமாகும்  அறிவற்ற செயல்களில் ஈடுபடும் எல்லாருமே மனநலம் குன்றியவர்கள்.

அதோடு, குடும்பப் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வேலையில்லா நிலை, மரபியல் பிரச்சனை, ஏமாற்றம், தோல்வி, சந்தேகம், போட்டி, பொறாமை, போதைப் பழக்கம் போன்ற வாழ்வில் ஏற்படும் எத்தனை எத்தனையோ துன்பங்களால் பாதிக்கப்பட்டு தங்களது விருப்பங்கள் நிறைவேறாமல் போகும்போது, மனம் உடைந்து விபரீதமாக நடந்து கொள்வோரும் மனநலம் பாதித்தவரே. அக்டோபர் 10, கடந்த சனிக்கிழமை உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 45 கோடி மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வயது வந்தவர்களில் 25 பேருக்கு ஏறக்குறைய ஒருவரும், பிரிட்டனில் பத்துச் சிறாருக்கு ஒருவரும் மனநலம் குன்றிய நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 15 விழுக்காட்டினரும், தமிழகத்தில் ஏறக்குறைய 65 இலட்சம் பேரும் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்பர்களே, உடல்நலத்தைப் போல, மனநலத்துக்கு முக்கியத்துவம் அளிக்காததால் மன நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது கூடிக் கொண்டே செல்கிறது.

மனநலப் பாதிப்பால் சோகம், தொடர் தலைவலி, பசியின்மை, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு, பயம், விபரீதக் கற்பனை, நம்பிக்கையற்ற, எதிர்மறையான எண்ணங்கள், குற்ற உணர்வு, தற்கொலை எண்ணம் ஆகியவை தோன்றும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எட்டு இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். ஒரு வயது குழந்தைக்குக்கூட மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  

ஒரு மனிதருடைய எழுச்சியையும் சாதனையையும் தீர்மானிக்கும் தளமே மனம்தான். உடலில் எந்தவித சேதமும் இல்லாமல், தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, அன்புக்குரியவரின் இறப்பு, வேறு விதமான பேரிழப்பால் மனம் சோர்ந்து எழுந்து நடக்கக்கூட முடியாமல் ஆகி விடுகிறது. ஆனால் சுடப்பட்ட 27 குண்டுகளை உடலுக்குள் வாங்கிக்கொண்டு சோர்ந்துவிடாமல் மனபலத்துடன் நடந்துவந்து மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொண்டவரும் உண்டு. எனவே அன்பர்களே, மனம் நலமாக இருப்பது மிகவும் முக்கியம். அகத் தூய்மை என்கிறோமே. அதுதான் மனத்தூய்மை. தனி நபரது மன நலம், குடும்பத்தின் மன நலனுக்கு உதவும். அது சமூகத்தின் மன நலனுக்கு உதவும். மக்களின் மனமது செம்மையானால் இவ்வுலகில் வன்முறையும், தீவிரவாதமும், பயங்கரவாதமும் இல்லாமல்போகும். மறைநூல்களைத் தினமும் வாசித்தல், அன்றாடத் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, இசை, நல்ல புத்தக வாசிப்பு போன்றவை மனத்தை நலமுடன் வைக்க உதவும். மன நலம் காப்போம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.