2015-10-12 16:12:00

நியாயமான, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் கொள்கைகள் அவசியம்


அக்.12,2015. மனிதரின் நலனில் அக்கறை கொண்ட, நீதியுடன்கூடிய ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் கொள்கைகளால் பருவநிலை மாற்றம் குறித்த 2வது உலக கருத்தரங்கு இடம்பெற வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இத்திங்களன்று நிறைவடைந்த மூன்று நாள் உலக மாநாட்டிற்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பொலிவியா திருப்பீடத் தூதருக்கு, திருத்தந்தையின் இச்செய்தியை அனுப்பினார்.

மேலும், பருவநிலை மாற்றம் குறித்த 2வது உலக கருத்தரங்கில் திருப்பீடத்தின் பிரதிநிதியாக, பொலிவியா திருப்பீடத் தூதர் பேராயர் Giambattista Diquattro அவர்கள் கலந்துகொண்டார்.

காலநிலையும், வாழ்வைப் பாதுகாத்தலும் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், இன்னும், ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். திருத்தந்தையின், இறைவா உமக்கே புகழ் திருமடலை மையமாக வைத்து பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales அவர்கள்  இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.