2015-10-12 16:01:00

துருக்கியில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு செபம்


அக்.12,2015. துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் அதில் காயமடைந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளை இம்மக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சிறிதுநேரம் தானும் அமைதியாகச் செபித்தார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக ஊர்வலம் மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என்றும் கூறினார்.

மேலும், இந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றையும் இச்சனிக்கிழமையன்று துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdogan அவர்களுக்கு அனுப்பினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்திச் செய்தியை அனுப்பினார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்னும், அக்டோபர் 13, இச்செவ்வாயன்று அனைத்துலக இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியை அனைவரும் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.