2015-10-12 16:43:00

இந்தியாவில் சாலை விபத்துகளால் 4 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்


அக்.12,2015. இந்தியாவில் சாலை விபத்துகளால், ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒருவர் வீதம் இறப்பதாகவும், இந்நிலை 2020ம் ஆண்டுக்குள் மூன்று நிமிடத்திற்கு ஒருவர் என்ற நிலையை எட்டும் எனவும் ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து ஒரு தொண்டு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், இந்திய சாலைகளில் பாதுகாப்பற்ற வாகனங்களால் ஏற்படும் குறைகளை களைதல் என்ற பெயரில், டில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வெளியிடப்பட்டன. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு அல்லது 3.8 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

அனைத்துலக சாலை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் Kiran K Kapila அவர்கள் கூறுகையில், சாலை பாதுகாப்புக்கு, பாதுகாப்பான வாகனங்கள் அவசியம் என்று கூறினார்.  

உலகத்திலேயே, இரண்டாவது பெரிய சாலை அமைப்பைக் கொண்டுள்ள இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் 10 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில், 2013ம் ஆண்டில் 4 இலட்சத்து 43 ஆயிரத்துக்கு அதிகமான சாலை விபத்துகள் இடம் பெற்றன. இவற்றில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 423 பேர் இறந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : PTI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.