2015-10-10 15:55:00

புவி வெப்பமடைதலால் அதிகரிக்கும் புதிரான சிறுநீரக நோய்


அக்.10,2015. மத்திய அமெரிக்காவில் 2002ம் ஆண்டிலிருந்து  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் காவுகொண்டுள்ள ஒரு புதிரான சிறுநீரக நோய், தற்போது இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் பரவி வருகின்றது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான, அமெரிக்க ஐக்கிய நாட்டு கொலராடோ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி பேராசிரியர் ரிச்சர்ட் ஜான்சன் அவர்கள், புவி வெப்பமடைதல் காரணமாக மனிதரைத் தாக்கியுள்ள முதல் நோய் இதுவாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

புவி வெப்பமடைதல் காரணமாக, உடலிலுள்ள நீரின் அளவு அதிகமாகக் குறைந்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக தடுக்கப்படுவதே இந்நோய்க்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பசிபிக் கடற்கரைப் பகுதியிலுள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் கடுமையான வெப்பத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வோரை இந்நோய்த் தாக்கி வந்தது,  ஆனால் தற்போது இந்தியா, வட அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்நோய் பரவியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குளிர் சாதனக் கருவிள் உள்ளிட்ட நவீனப் பொருட்களின் பயன்பாட்டினால் குளோரோ புளூரோ கார்பன் என்ற வாயு வெளியாகிறது. அதிகமாக வெளியாகும் இந்த வாயுவினால், வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டையின் காரணமாக, நீலநிறக் கதிர்கள் நேரடியாக பூமியின் மேற்பகுதியை வந்தடைகின்றன. இதன் காரணமாக, பூமியின் மேற்பரப்பு பன்மடங்கு அதிக வெப்பமடைந்து மக்களுக்கு எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆதாரம் : IANS/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.