2015-10-10 16:00:00

புளூட்டோ கோளத்தில் நீல வானம், பனிக்கட்டி


அக்.10,2015. புளூட்டோ கோளத்தில் பனிக்கட்டிகளும், பூமியைப் போலவே நீல வானமும் காணப்படுவதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது.

பூமிக்கு 500கோடி கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்துவரும் New Horizons விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இது குறித்துப் பேசிய New Horizons ஆய்வுக் குழுவைச் சேர்ந்த Carly Howett அவர்கள், புளூட்டோவைச் சுற்றிலும் நுண்ணிய துகள்களாலான படலம் காணப்படுகிறது. அது உண்மையில் சாம்பல் நிறமாகவோ, சிவப்பு நிறமாகவோ இருக்கலாம். எனினும் அந்தப் படலத்தில் சூரிய ஒளி பட்டு நீல நிறமாகப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

பூமியைச் சுற்றியுள்ள படலத்தில் நுண்ணிய நைட்ரஜன் மூலக்கூறுகள் சூரிய ஒளி பட்டு நீல நிறத்தைப் பிரதிபலிக்கின்றன. அதனாலேயே பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வானம் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது. அதைப் போலவே, புளூட்டோவைச் சுற்றியுள்ள படலத்தில் அமைந்துள்ள நுண்ணிய துகள்களால் அதன் வானமும் நீல நிறமாகக் காணப்படுகிறது என்றார் Howett.

இது தவிர, புளூட்டோ கோளம் முழுவதும் உறைந்த நிலையில் சிறு சிறு பனிக் கட்டிகள் விரவிக் கிடப்பதாக நாசா முதல் முறையாகக் கண்டறிந்துள்ளது.

மேலும், 1930ம் ஆண்டில் புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து Mercury, Neptune, Venus, Uranus, Earth, Mars, Jupiter, Saturn ஆகிய ஒன்பது கோளங்கள் பற்றியே பேசப்பட்டு வந்தன.  ஆயினும் தற்போது நம் சூரியக் குடும்பத்தில் 397 கோளங்கள் இருப்பதாக ஒரு வானியல் வல்லுனர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.