2015-10-10 15:50:00

உலக மன நல தினம் அக்டோபர் 10


அக்.10,2015. மனநலம் குன்றிய மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இம்மக்களின் வாழ்வுத் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கு உறுதிகள் வழங்கப்படவும் உலக மன நல தினம் நல்லதொரு வாய்ப்பாக உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 10, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மன நல தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் அமலில் இருக்கின்றபோதிலும், உலகில் இம்மக்கள் தொடர்ந்து பாகுபாட்டையும், பாலியல் வன்கொடுமைகளையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொள்கின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மனிதரும் மாண்புடனும், சமூகப் பாகுபாடின்றியும் நடத்தப்படவும், தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களோடு வாழ்வதற்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர், சட்டங்கள் மற்றும் கொள்கைகளால் இவ்வுரிமை பாதுகாக்கப்பட்டு, ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார் பான் கி மூன்.

மன நலத்தில் மாண்பு என்ற தலைப்பில் இவ்வாண்டின் மன நல தினம் கடைப்பிடிக்கப்பட்டது. உலகில் 13 விழுக்காட்டினர் மன நலம் குன்றியவர்கள்.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.