2015-10-10 15:40:00

அகதிகளைக் காப்பாற்றுவதற்கு அரசியல் அளவில் நடவடிக்கை அவசியம்


அக்.10,2015.  மத்திய கிழக்கில், குறிப்பாக, சிரியாவில் இடம்பெறும் சண்டையால் புலம்பெயரும் மக்களின் நிலை கவலை தருவதாக உள்ளவேளை, கடும்ஏழ்மை மற்றும் மனித உரிமை மீறல்களுக்குத் தப்பித்து வரும் இம்மக்களின் வாழ்வு பாதுகாக்கப்பட அரசியல் அளவில் நடவடிக்கை அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், UNHCR ‎புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் பொது விவாதத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

போர் மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர், ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்த ஆபத்தான பயணத்தில் இவ்வாண்டில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் மத்திய தரைக் கடல் பகுதியில் இறந்துள்ளனர் என்றும் பேராயர் தொமாசி கூறினார்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் பிரதிநிதிகளுக்கு அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்வைத்த அழைப்பைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர், அரசியல் தலைவர்கள், சொந்த ஆதாயங்களுக்காக கொள்கைகளை அமைக்காமல், நியாயமான, துணிச்சலுடன்கூடிய கொள்கைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.