2015-10-09 16:47:00

எல்லாச் சூழல்களையும் கிறிஸ்தவர்கள் ஆய்ந்தறிய வேண்டும்


அக்.09,2015. எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருக்கும் நேரங்களிலும்கூட கிறிஸ்தவர்கள் அனைத்தையும் கவனமுடன் ஆய்ந்தறிய வேண்டும், ஏனென்றால் அலகை மறைந்திருந்து எப்போதும் நம்மை ஏமாற்றுவதற்கு முயற்சிப்பான் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் வாழ்வில் நடைபெறும் அனைத்தையும், அவை இறைவனிடமிருந்து வருகின்றனவா அல்லது நாம் தவறான பாதையைத் தேர்ந்துகொள்வதற்கும், நம்மை ஏமாற்றுவதற்கும் முயற்சிக்கும் அலகையிடமிருந்து வருகின்றனவா என்பதை ஆய்ந்தறிய வேண்டியதன் அவசியம் குறித்து இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு இயேசு பேய்களை ஓட்டுகிறார் என்று குற்றம் சுமத்திய மக்களுக்கு இயேசு பதிலளித்தது பற்றி விளக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை(லூக்.11:15-26) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் எந்நிகழ்வையும் ஆய்ந்தறிய வேண்டும் என்று கூறினார்.

இயேசுவைப் பாராட்டாத மற்றுமொரு குழு, அவரின் போதனைகளையும், செயல்களையும் மாறுபட்ட முறையில் விளக்கி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டது என்றும், சிலர் பொறாமையாலும், இன்னும் சிலர் மறைக்கோட்பாடுகளுக்காகவும், வேறு சிலர் உரோமையர்கள் வந்து தங்களைக் கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தாலும் மக்களை இயேசுவிடமிருந்து தூர வைக்கும் வழிகளைத் தேடினர் என்று கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் வார்த்தைகளுக்குத் தவறான விளக்கங்கள் வழங்கப்படும் எந்த ஒரு சூழலின் தொடக்கத்தையும் கிறிஸ்தவர்கள் தேர்ந்து தெளிய வேண்டும், ஏனென்றால், விசுவாச வாழ்வில் சோதனைகள் எப்போதும் திரும்பி வரும், தீய ஆவி ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.

மறைந்திருந்து செயல்படும் தீய ஆவி, கற்றுத்தேர்ந்த தனது நண்பர்களோடு வந்து நம் கதவைத் தட்டுகிறது, அனுமதி கேட்டு உள்ளே வந்து அந்த நபரோடு வாழ்கிறது, சூழ்நிலை சார்ந்தவைகளை எவ்வாறு செய்வது என்று மெல்ல மெல்ல வழிகாட்டுகின்றது என்று எச்சரித்தார் திருத்தந்தை.

தீய ஆவி நம் மனச்சான்றை மயக்குவதில் வெற்றி காணும்போது அதை அது தனது உண்மையான வெற்றியாக நோக்கி நம் மனச்சான்றின் தலைவனாகி விடுகிறது என்றுரைத்த திருத்தந்தை, இத்தகைய தாக்குதல்கள் குறித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும், நாம் எப்போதும் ஆன்ம பரிசோதனை செய்ய வேண்டும் என்று மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.