2015-10-08 16:00:00

பள்ளிச்சிறார் சாலை விபத்துக்களில் இறப்பதை தடுக்க நடவடிக்கை


அக்.08,2015. உலகில் சாலை விபத்துக்களில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 500 பள்ளிச் சிறார் இறக்கும்வேளை, இந்த இறப்புக்களையும், சாலை விபத்துக்களையும் தடுத்து நிறுத்துவற்கு அரசுகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்குமாறு ஐ.நா. அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளிக்கு நடந்து செல்லும் அனைத்துலக நாள், அக்டோபர் 07, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார் சாலை பாதுகாப்புக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி Jean Todt.

தற்போது சாலை விபத்துக்களில் இறப்பவர்களில் 15க்கும், 29க்கும் உட்பட்ட வயதினரே அதிகம் என்றும், இவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அரசுகள் உடனடியாக செயலில் இறங்கவில்லையெனில், இவ்வாறு இறப்பவர்களில் 5க்கும்,14 வயதுக்கும் உட்பட்ட சிறாரே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்றும் Todt தெரிவித்தார். 

உலகெங்கும் சிறாருக்குச் சாலை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அனைத்துலக வாகன கூட்டமைப்பு(FIA) தயாரித்த குறும்படம் ஒன்றை வெளியிட்ட நிகழ்விலும், சிறாரின் சாலை பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்தார் Jean Todt.    

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.