2015-10-08 15:44:00

இஸ்ரேலும், பாலஸ்தீனாவும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்


அக்.08,2015. எருசலேமிலும், புனித பூமியிலும் புதிதாக வெடித்துள்ள வன்முறை, இஸ்ரேலும், பாலஸ்தீனாவும், துணிச்சலுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் உடனடியாகத் தொடங்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகம் கூறியது.

எருசலேமிலும், புனித பூமியிலும் புதிதாக வெடித்துள்ள வன்முறை குறித்து எருசலேம் முதுபெரும் தந்தை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-அரபுச் சண்டை குறித்து ஐ.நா.வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, இவ்விரு தரப்புக்கும் இடையே இடம்பெறும் பேச்சுவார்த்தையில், இருதரப்பிலும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

இப்பேச்சுவார்த்தையே, புனித நகரான எருசலேமிலும், பாலஸ்தீனப் பகுதிகளிலும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தும் என்றுரைக்கும் அவ்வறிக்கை, ஐ.நா.வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

எருசலேம் பழைய நகரிலும், கிழக்கு எருசலேமிலும் புதிதாக வெடித்துள்ள வன்முறை, அண்மை நாள்களில் பெத்லகேம் தொடங்கி வெஸ்ட் பேங்க்கின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.