2015-10-08 15:29:00

இளையோர் நண்பர்களே, சுதந்திர இதயத்தை ஆண்டவரிடம் கேளுங்கள்


அக்.08,2015. “அன்பு இளையோர் நண்பர்களே, இவ்வுலகின் போலியான இன்பங்களால் அடிமையாக ஆக்கப்படாமல் இருக்கும் சுதந்திர இதயத்திற்காக நம் ஆண்டவரிடம் மன்றாடுங்கள்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.   

மேலும், வத்திக்கானில் நடைபெற்றுவரும் 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் உரையாற்றிய தென்னாப்ரிக்கத் தம்பதியர் Nkosi, கடந்த 35 ஆண்டு கால தங்களின் திருமண வாழ்வு மற்றும் குடும்ப வாழ்வுக்கான அழைப்பைத் தெரிவு செய்வது பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.

தென் பிராந்திய ஆப்ரிக்க ஆயர் பேரவையின் தேசிய குடும்ப ஆணையத்தில் ஆலோசனைக் குழுவிலுள்ள இத்தம்பதியர், இளையோர் திருமணம் செய்துகொள்வதற்கு அஞ்சுகின்றனர், திருமண அர்ப்பணத்தை ஒரு சுமையாக நோக்குகின்றனர் என்று கூறினர்.

கிறிஸ்துவை தங்களின் புதிய நம்பிக்கையாகப் பார்த்து புனிதமான திருமணத்தில் நுழைவதற்குத் தாங்கள் இளையோரை ஊக்கப்படுத்தி வருவதாகவும், புதிய வாழ்வு பிறந்துகொண்டிருப்பதை தாங்கள் அனுபவித்து வருவதாகவும், பெற்றோரும் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர் எனவும் Nkosi தம்பதியர் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் மெக்சிகோவின் Galindo தம்பதியரும் தங்களின் 45 ஆண்டு கால திருமண வாழ்வு அனுபவத்தையும், குடும்பங்களுக்குத் தாங்கள் ஆற்றிவரும் பணிகளையும் விளக்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.