2015-10-08 15:25:00

இறைவன் நேர்மையாளரை ஒருபோதும் கைவிடுவதில்லை


அக்.08,2015. நேர்மையாளர்களை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை, அதேநேரம், தீமையை விதைக்கும் கொடியவர்களின் பெயர்கள் விண்ணகத்தில் நினைவுகூரப்படாது என்று இவ்வியாழன் காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மலாக்கி இறைவாக்கினர் நூல் மற்றும் லூக்கா நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடியோர்க்கு நன்மையான காரியங்கள் நடப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழும் துணிச்சல்மிகுந்த ஓர் இளம் தாய் புற்றுநோயால் படுத்த படுக்கையில் இருக்கிறார், அது ஏன்? ஒரு நல்ல பக்தியுள்ள வயதான ஒரு பெண்ணின் மகன் மாஃபியா குற்றக் கும்பலால் கொல்லப்படுகிறார், அது ஏன்? என்ற கேள்விகளை எழுப்பினார் திருத்தந்தை.

கொடிய செயல்களைச் செய்வோரும், தீமை செய்வோரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், தாங்கள் விரும்பும் எல்லாவற்றையும் பெற்று வாழ்வதையும், ஆனால் நன்மை செய்ய நினைப்பவர் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதையும் நாம் எத்தனை முறைகள் பார்க்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆண்டவர் நேர்மையாளர்களை எப்போதும் கண்காணித்து வருகிறார் என்று கூறினார்.

நம் கேள்விக்கான பதிலை, பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர் நற்பேறு பெற்றவர் என்றுரைக்கும் திருப்பாடல் ஒன்றில் காண்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை. 

செல்வந்தரும், ஏழை இலாசரும் என்ற உவமை பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இதில் செல்வந்தரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, கொடியவர்க்கு இறைவனின் பதிவு நூலில் பெயர் கிடையாது, அவர்களுக்குப் பெயரைத் தழுவுகின்ற சொல்லே கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இறைவனின் வழியில் நடப்பவர் இறைமகனோடு, மீட்பராம் இயேசுவோடு இருப்பார்கள், இந்தப் பெயரையும், இயேசு நமக்காக அனுபவித்த விவரிக்க முடியாத சிலுவைப் பாடுகளையும் புரிந்து கொள்வது கடினம் என்று மறையுரையில் கூறினார் .

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.