2015-10-07 16:41:00

வத்திக்கான் வானொலியில், கொரிய மொழி சேவை ஆரம்பம்


அக்.07,2015. வத்திக்கானுக்கும், கொரியா நாட்டிற்கும் இடையே தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில், வத்திக்கான் வானொலியில், கொரிய மொழியில் ஒரு வலைத்தள பக்கம் அக்டோபர் 9ம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் வானொலி, கொரியா ஆயர்கள் பேரவை, வத்திக்கானில் பணியாற்றும் கொரியா தூதரகம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டுறவு முயற்சியால் இந்தப் புதியச் சேவை செயல்படத் துவங்குகிறது.

இதுவரை, தமிழ், இந்தி, மலையாளம், அரேபியம், சீனம், ஜப்பான் ஆகிய ஆசிய மொழிகளில் இயங்கிவந்த வத்திக்கான் வானொலி, கொரிய மொழியில் அக்டோபர் 9ம் தேதி இயங்கத் துவங்கும்.

'கொரிய மொழியின் தேசிய நாள்' என்று கொரிய குடியரசால் கொண்டாடப்படும் அக்டோபர் 9ம் தேதியன்று ஆரம்பமாகும் இந்தப் புதிய முயற்சியால், வத்திக்கான் வானொலி, 39 மொழிகளில் தன் சேவையைத் தொடருகின்றது.

உலகில் இயங்கிவரும் வானொலி நிலையங்கள் அனைத்திலும், வத்திக்கான் வானொலி மட்டுமே மிக அதிக மொழிகளில் சேவை ஆற்றிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.