2015-10-07 16:31:00

உலகக் கண்காட்சியில் வெனிஸ் முதுபெரும் தந்தை உரை


அக்.07,2015. சுற்றுச்சூழல் பிரச்சனைகளை, மனிதச் சமுதாயச் சூழல் பிரச்சனைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற தன் திருமடலில் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று, வெனிஸ் உயர்மறை மாவட்ட முதுபெரும் தந்தை, பிரான்செஸ்கோ மொராலியா (Francesco Moraglia) அவர்கள் கூறினார்.

இத்தாலியின் மிலான் நகரில், கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் Expo 2015 எனப்படும் உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, வெனிஸ் நகரில் நடைபெற்றுவரும் Aquae Venezia 2015 என்ற கண்காட்சி அரங்கத்தில், முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள், இச்செவ்வாயன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

நீரால் சூழப்பட்டுள்ள வெனிஸ் நகரில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, நீரின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கிக் கூறுகிறது என்று முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்ப, வர்த்தக உலகம், மனிதர்களை மையப்படுத்தாமல் போகும் ஆபத்து உள்ளது என்பதை, திருத்தந்தை தன் திருமடலில் குறிப்பிட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள், வர்த்தக உலகம் காட்டும் இந்தப் பாதையில் இவ்வுலகம் பயணித்தால், அதன் அழிவு விரைவில் வரும் என்று எச்சரித்தார்.

அக்டோபர் 31ம் தேதி முடிய நடைபெறும் Expo 2015ன் ஒரு பகுதியாக, வெனிஸ் நகரில் உள்ள Aquae Venezia 2015 கண்காட்சியின் அரங்கம், இனி வரும் காலங்களில், பன்னாட்டு கண்காட்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று இக்கண்காட்சியின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.