2015-10-07 16:52:00

இஸ்லாமியருக்கு ஆதரவாக பிலிப்பின்ஸ் இயேசுசபை பல்கலைக்கழகங்கள்


அக்.07,2015. பிலிப்பின்ஸ் நாட்டில் இயங்கிவரும் இயேசு சபை பல்கலைக் கழகங்களின் தலைவர்கள் இணைந்து, அந்நாட்டின் தென் பகுதியில் வாழும் மோரோ (Moro) மக்களின் தனி அடையாளத்தை பிலிப்பின்ஸ் அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.

இஸ்லாமியர்களை அதிக அளவில் கொண்டுள்ள மின்டனாவோ பகுதி தனித்து சுதந்திரமாக இயங்குவதற்கு, பிலிப்பின்ஸ் அரசு, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, பல்கலைக் கழகத் தலைவர்கள், இத்திங்களன்று அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

பிலிப்பின்ஸ் அரசுக்கும், மின்டனாவோ பகுதியில் வாழும் பாங்க்ஸமோரோ (Bangsamoro) மக்களுக்கும் இடையே, கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பேச்சு வார்த்தைகளின் பயனாக, இந்தச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்று பிலிப்பின்ஸ் நாட்டில் இயங்கிவரும் 5 இயேசு சபை பல்கலைக் கழகங்களின் தலைவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பிலிப்பின்ஸ் அரசுக்கும், மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் இடையே நடைபெற்றுவந்த மோதல்கள், 2014ம் ஆண்டு முடிவுக்கு வந்தன.

மோரோ மக்களின் பாதுகாப்பை மையப்படுத்தி, பாங்க்ஸமோரோ அடிப்படை சட்டம் என்ற சட்டவரைவை, பிலிப்பின்ஸ் அரசு, இவ்வாண்டு டிசம்பர் மாதம் அமல்படுத்த உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.